முதல் முறையாக மனிதனுக்கு நீயூராலிங் சிப்

Last updated on February 16th, 2024 at 05:32 pm

நியூராலிங் சிப் முதன் முதலாக மனிதனுடைய மூளையில் பொருத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பற்றி எலோன் மஸ்க் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் முதல் மனிதனுக்கு நேற்று நியூராலிங் சிப் பொருத்தப்பட்டுள்ளது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் என்பது போன்று சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

நியூராலிங் தொழினுட்பம் பற்றி கடந்த வருடம் வைரலாகப் பேசப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எலோன் மஸ்க் அவர்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அறிவியலில் ஏதாவது புதுசு புதுசுசாக செய்துகொண்டிருப்பார். அவரால் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது நியூராலிங் நிறுவனம்.

நியூராலிங்கினுடைய நோக்கம் மனிதனுடைய மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி கணினியுடன் இணைத்து செயற்பட வைப்பதாகும். இதனை Brain Computer Interface (BCI) என்று அழைக்கலாம். நியூராலிங் சிப் சிறியளவில் நாணயக்குற்றியளவில் மிக மிக நுண்ணிய வடங்களைக் கொண்டதாக இருக்கும். அந்த சிப் மண்டையோட்டிலே ஆழமாக இல்லமால் மேற்பகுதியில் பொருத்தப்படும். பொருத்தப்பட்டுள்ள சிப் மூளையின் செயற்பாடுகளை பதிவு செய்து வெளியே உள்ள கணினி போன்ற சாதனத்திற்கு அனுப்புவதன் மூலமாக கணினியையும் மூளையையும் தொடர்புபடுத்திக்கொள்ளமுடியும்.

இந்தத் தொழினுட்பம் கடந்த ஆண்டுகளில் குரங்கு, பன்றி போன்ற விலங்குகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்ற ஆண்டு நியூராலிங் சிப் பொருத்தப்பட்ட குரங்கு ஒன்று கணனியில் சாதாரண கேம் ஒன்றை விளையாடும் காணொளி வெளியிடப்பட்டிருந்தது. நியூராலிங் பற்றி அதிகம் பேசப்பட்டது அப்போதுதான். அதன் பிறகு மனிதனுக்கு சோதனை செய்ய அனுமதி கிடைத்து இப்போது மனிதனின் மூளையில் சிப் பொருத்தி சோதித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நியூராலிங் சோதனை பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நியூராலிங் நிறுவனம் மட்டுமல்ல பல நிறுவனங்கள் இதே போன்ற BCI ஆய்வுகளில் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கின்றன. 2022 ஆம் ஆண்டிலும் Synchron எனும் நிறுவனம் அவர்களுடைய BCI சாதனத்தை மனிதனுக்கு பொருத்தியிருந்தார்கள். ஆனால் நியூராலிங்தான் மூளையில் சத்திரசிகிட்சை செய்து சிப்பை உள்ளே பொருத்துகிறார்கள். எதிர்காலத்தில் BCI தொடர்பான ஆய்வுகள் நிறையவே நடக்கும் என்பதைக் கூற முடியும்.

நியூராலிங் போன்ற தொழினுட்பங்களால் நிறையவே புதுமையான விடயங்களை செய்யமுடியுமாக இருக்கும். மூளையின் செயற்பாடுகளை பதிவு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும், கணனி போன்ற சாதனங்களை சிந்தனை மூலமாகவே கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும், உடல் இயங்காத மனிதர்களால் சிந்தனை மூலமாகவே தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடியாதாக இருக்கும், செயற்கையான இயந்திரக் கை/கால்கள் பொருத்தப்படும் போது அவற்றை மூளையினால் சாதாரண கை கால்களைப் போன்று இயங்க வைக்கக்கூடியதாக இருக்கும்.

நியூராலிங் போன்ற இந்த மாதிரியான தொழினுட்ப வளர்ச்சி மனிதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். மனிதனுடன் எந்திரங்களை இணைப்பது, சிந்தனை எண்ணங்களை சேமிப்பது/பரிமாறுவது, மனிதனுடைய திறன்களை சாதனங்களின் உதவியுடன் அதீதமாக்குவது  போன்ற இதுவரை கற்பனையாக இருந்தவற்றை நிஜவுலகில் கொண்டுவரலாம்.

அதே நேரம் இவற்றினால் நிறையவே பிரச்சினைகளும் வரலாம் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இன்றைக்கு இணையத்தின் வளர்ச்சியினால் Privacy என்ற ஒன்றை யாராலும் எதிர்பார்க்கமுடியாமல் உள்ளது என்றால் நேரடியாக மூளையிலே கணனியினை இணைக்கும்படியாகிவிட்டால் அங்கு தனிப்பட்ட வாழ்க்கை, Privacy என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. யாராவது உங்களுடைய மூளையை Hack செய்து உங்களை அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த மாதிரி மாற்றுகின்ற அளவுக்கு அறிவியல் தொழினுட்பம் வளரலாம். எதிர்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த மாதிரியான விடயங்களையெல்லாம் அறிவியற் திரைப்படங்களிலும், அறிவியற் புனைவு நாவல்களிலும் மட்டுமே பார்த்திருப்போம். ஆனால் இப்போது அறிவியல் வளர்ச்சியடைந்து கற்பனைகள் நியமாகிக் கொண்டுவரும் வேகத்தில் எதிர்காலத்தில் உலகம் எப்படி மாறப்போகின்றது என்ற எதிர்பார்ப்பும் ஆச்சரியமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

நன்மையோ, தீமையோ நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ அறிவியலும் தொழினுட்பமும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். எதிர்காலத்தை வெல்ல வேண்டுமானால் நாமும் அதற்கேற்றாற் போல மாறிக்கொண்டேயிருக்க வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading