மெயின் கேம்ப் (எனது போராட்டம்)

Last updated on September 17th, 2023 at 12:10 am

வரலாற்றில் தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை பதித்துவிட்டுச் சென்றிருப்பவர்களுள் அடோல்ப் ஹிட்லர் முக்கியமான ஒருவர். வேறொரு தேசத்தில் வேறொரு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தும் இன்று இங்கே இத்தனை வருடங்கள் கழிந்தும் ஹிட்லர் என்ற பெயரை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவிற்கு அவருடைய பெயர் வரலாற்றில் அழுத்தமாக பதியப்பட்டுள்ளது.

அன்று அந்த மனிதனுடைய எண்ணங்கள், சிந்தனைகள் எப்படியிருந்திருக்கும், எப்படி யோசித்திருப்பார், எந்த மாதிரியான மனநிலையில் இருந்திருப்பார் என்பதை நாம் தெரிந்துகொள்வதற்கு அவரே எழுதிய புத்தகத்தைப் படிப்பதைத் தவிர வேறு சிறந்த வழி இருக்க முடியாது.

ஹிட்லர் எழுதிய நூலின் பெயர் மைன் கேம்ப் (Mein Kampf). இந்த நூல் தமிழில் எனது போராட்டம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலை இணையத்தில் பரிந்துரைக்கும் போது ஹிட்லரின் சுயசரிதை நூல் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் மெயின் காம்ப் முழுமையாக ஹிட்லரின் சுயசரிதை நூல் என்று சொல்ல முடியாது.

இந்நூலில் தன்னுடைய அரசியல் கொள்கைகளைப் பற்றியே அதிகமாக விளக்கியிருக்கின்றார். இந்நூலைப் படிப்பதன் மூலமாக ஹிட்லரின் வாழ்க்கை பற்றி, அரசியல் பயணம் பற்றி, அரசியல் கொள்கைகள் பற்றி, தேசிய சோஷலிசக் கட்சி பற்றி, அரசாங்கம் பற்றி, ஜேர்மனி மற்றும் மற்றைய நாடுகள் பற்றி, முதலாம் உலகப் போர் பற்றி, யூதர்கள் மற்றும் பூர்ஷீவாக்கள் பற்றி என நிறைய விடயங்களை தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால் மைன் காம்ப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன் சில விடயங்களை கவனத்திற்கொள்ள வேண்டும். ஹிட்லர் ஜேர்மனியில் சர்வாதிகார ஆட்சி செய்தவர், யூத இனத்தவர்களை முழுமையாக வெறுத்தவர், யூதர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்தவர், இரண்டாம் உலகப்போருக்கு ஒரு வகையில் காரணமானவர். இப்படிப்பட்ட ஒரு மனிதன் நூல் ஒன்றை எழுதியிருக்கின்றார் என்றால் அவர் கூறுகின்ற கருத்துக்களை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற புரிதலோடு நூலை வாசிக்க வேண்டும்.

இந்நூல் மட்டுமல்ல எந்த நூலாக இருந்தாலும் எழுத்தாளர் சொல்கின்ற விடயங்களை அப்படியே நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை பகுத்தறிந்துகொள்ள வேண்டும். எனது போராட்டம் (Mein Kampf) நூலை படிப்பதாக இருந்தால் நாம் தெளிவாக எடுத்துக்கொள்ள வேண்டியவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

ஏனெனில் இந்நூலில் ஹிட்லர் சொல்கின்ற நிறையக் கருத்துக்கள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஹிட்லர் கூறுகின்ற பல கருத்துக்கள் பிற்போக்குத்தனமாகத் தெரிகின்றன. நூல் முழுவதுமே பல கருத்துக்கள் அவ்வாறுதான் உள்ளன.

உதாரணமாகச் சொன்னால், மனித சமூகத்திலேயே மற்ற இனத்தவர்களை விட ஜேர்மன் இன மக்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற கருத்தை ஹிட்லர் முன்வைக்கின்றார். ஜேர்மனியர்கள் இன்னொரு இனத்தவர்களுடன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது, அவ்வாறு திருமணம் செய்துகொள்ளும் போது இரத்தக்கலப்பினால் ஜேர்மனியர்களின் இரத்தம் அசுத்தப்படுகின்றது. இதனால் ஜேர்மனியர்களின் தரம் குறைவடைந்து அறிவாற்றல் குறைவடைகின்றது போன்ற கருத்துக்களையும் ஹிட்லர் முன்வைக்கின்றார். மனிதர்கள் எல்லோருமே சமானானவர்கள் என்று படித்திருந்தீர்கள் என்றால் ஹிட்லரின் இந்தக் கருத்துக்களை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதே போல யூதர்களிற்கு எதிரான கருத்துக்கள் நூல் முழுவதுமே தொடர்கின்றது. ஜேர்மன் நாட்டை யூதர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றார்கள், ஜேர்மனியை யூதர்கள் சுரண்டிக்கொண்டிருக்கின்றார்கள், முதலாம் உலகப்போரில் ஜேர்மனி தோல்வியடைந்ததற்கு யூதர்களே காரணம்  போன்ற ஒட்டுமொத்த யூதர்களுக்கும் எதிரான கருத்துக்களை ஹிட்லர் நூல்முழுவதும் விபரித்திருக்கின்றார்.

யூத இனத்தவர்களை கெட்டவர்களாக காட்டுகின்றார். ஒட்டுமொத்த யூதர்களுக்கும் எதிரான மனநிலையை வாசிப்பர்களுக்கு விதைக்க முயற்சிக்கின்றார் ஹிட்லர். ஒட்டுமொத்த யூத இனத்தவர்களும் மோசமானவர்கள் என்ற கருத்தை வாசகர்களுக்கு கடத்துகின்றார் ஹிட்லர்.

இவ்வாறான பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளன. ஆனாலும் ஹிட்லர் நூலில் தரும் விளக்கங்களை பார்க்கும் போது சில வேளைகளில் வாசகர்களுக்கு ஹிட்லர் சொல்கின்ற கருத்துக்கள் எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்ற மனநிலைக்கும் வரக்கூடிய சந்தர்ப்பமும் அமைந்துவிடும் என்றுதான் நினைக்கின்றேன். அதனால்தான் மெயின் காம்ப் நூலின் ஒவ்வொரு வரியைப் படிக்கும் போதும் தெளிவான அறிவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படியானால் மெயின் காம்ப் நூலில் இவ்வாறான எதிர்மறையான கருத்துக்கள் மட்டுமேதான் உள்ளதா என்று கேட்டால் அப்படியில்லை. ஹிட்லருடைய வாழ்க்கையை சுயசரிதையாகத் தெரிந்துகொள்ள மெயின் காம்ப் சிறந்த நூலாக இருக்கும். உதாரணத்திற்கு, ஹிட்லருக்கு ஒவியத்தின் மேல் இருந்த ஈடுபாடு பற்றி, கட்டடக்கலை மேல் இருந்த ஆர்வம் பற்றி இந்நூலை வாசித்ததன் மூலமாக நான் தெரிந்துகொண்டேன்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மையான நிறைய விடயங்களையும் ஹிட்லர் விளக்கியிருக்கின்றார். உதாரணமாக அரசியல் பற்றிய சில விடயங்கள், பிரச்சாரம் செய்வது பற்றிய விடயங்கள், மேடைப் பேச்சைப் பற்றி கூறுகின்ற விடயங்கள், கல்வியைப் பற்றி கூறியிருக்கின்ற சில விடயங்கள், சாமானிய மக்களின் மனநிலையைப் பற்றி கூறியுள்ள சில விடயங்களை நாம் ஆராய்ந்து பார்த்து எடுத்துக்கொள்ளக்கூடியாதாக உள்ளது.

மெயின் காம்ப் நூலை ஹிட்லர் என்ற மனிதர் எழுதியுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக வாசிக்ககூடாது, அதில் சொல்லப்பட்டவை அனைத்துமே எதிர்மறையான விடயங்கள் என்று ஒதுக்கிவிடக்கூடாது. என்னைக்கேட்டால் இந்நூல் வாசிக்கப்பட வேண்டியது என்று சொல்வேன். ஏனெனில் இந்நூலிலிருந்து தெரிந்துகொள்வதற்கு, கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. நூலை வாசிக்கின்ற வாசகன் தான் எதை எடுத்துக்கொள்ள வேண்டும், எதை எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற தெளிவோடு இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

மெயின் காம்ப் நூல் பற்றிய, இந்தப் பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். ஹிட்லர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Share
Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading