மாஸ்லோவின் தேவைக் கோட்பாடு

Last updated on February 1st, 2024 at 06:59 pm

ஒவ்வொரு உயிர்களுக்கும் தேவைகளும் விருப்பங்களும் இருக்கும். மனிதர்களிற்கான தேவைகளும் விருப்பங்களும் சற்றே அதிகமானதாகவும் மற்றைய உயிரினங்களிலிருந்து வேறுபட்டதாகவும் காணப்படுகின்றன.

உதாரணமாக உணவு, வசிப்பிடம் போன்ற தேவைகள் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத பொதுவான தேவைகளாக உள்ளன. உடை, பணம் போன்ற தேவைகள் மனிதனுக்கு மட்டுமே உள்ள தேவைகளாகும். மனிதனுடைய வாழ்க்கையே தங்களுக்கான தேவைகளையும், விருப்பங்களையும் நோக்கி ஒடுவதாகவே அமைந்திருக்கின்றது.

மனிதனுடைய தேவைகளைப் பற்றி கூறுகின்ற கோட்பாடுதான் மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு ஆகும். இந்தக் கோட்பாட்டினை முன்வைத்தவர் ஆப்ரகாம் மாஸ்லோ (Abraham Maslow) என்ற உளவியலாளர் ஆவார். அதனால்தான் இக்கோட்பாடு மாஸ்லோவின் தேவை படிநிலைக் கோட்பாடு (Maslow’s Hierarchy of Needs Theory) என அழைக்கப்படுகின்றது.

ஆப்ரகாம் மாஸ்லோ அவர்கள், மனிதனுடைய தேவைகளை 5 பிரிவுகளாக வகைப்படுத்தி அவற்றை ஒர் பிரமிட் வடிவத்தில் வடிவமைத்திருக்கின்றார். பின்வரும் படம் மாஸ்லோவின் தேவை படிநிலைக் கோட்பாட்டினை விளங்குகின்ற படம் ஆகும். பிரமிட்டில் உள்ள தேவைகளை கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் நோக்கி அவதானிக்க வேண்டும்.

மாஸ்லோவின் தேவை படிநிலைக் கோட்பாட்டின் படி, ஒரு மனிதன் மேல்மட்டத்தில் உள்ள தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமெனில் முதலில் கீழ்மட்டத்தில் உள்ள தேவைகளை நிறைவேற்றிக் கொண்டால்தான் முடியும்.

கீழ்மட்டத்தில் உள்ள தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் போதுதான் மனிதன் அடுத்தகட்ட தேவையை நோக்கி செல்ல உத்வேகத்துடன் தூண்டப்படுவான். உதாரணமாக கீழ் மட்டத்தில் உள்ள உடலியல் தேவைகளான உணவு, நீர் போன்றவை கிடைத்த பின்னர்தான் பாதுகாப்பு தேவைகளான ஆரோக்கியம், வீடு பற்றி மனிதனால் சிந்திக்க முடியும்.

உயிர்வாழ்வதற்கு அவசியமான உணவு, நீர் போன்ற அடிப்படை உடலியல் தேவைகளே கிடைக்கவில்லையெனில் செல்வத்தை சம்பாதிப்பது பற்றியோ, வசிப்பிடம் பற்றியோ மனிதன் சிந்திக்க மாட்டான்.


மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாட்டில் உள்ள தேவைகளைப் பற்றி கீழிருந்து மேல்நோக்கி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

01. உடலியல் தேவைகள் – Physiological Needs

மாஸ்லோவின் தேவைக் கோட்பாட்டில் முதலாவதாக உடலியல் தேவைகள் மனிதனுக்கு அவசியமானதாக சொல்லப்படுகின்றது.

உடலியல் தேவைகள் என்று சொல்லும் பொழுது உணவு, நீர், சுவாசம், ஒய்வு, செக்ஸ் போன்ற மனிதனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற உடலியல் சார்ந்த தேவைகள் உள்ளடங்குகின்றன. மனிதனுடைய முதல் முயற்சி உடலியல் தேவைகளிற்கானதாகவே இருக்கும். ஒரு மனிதனுக்கு உடலியல் தேவைகள் பூர்த்தியான பின்னர்தான் அடுத்த கட்ட தேவையை நோக்கிச் செல்வான்.

02. பாதுகாப்புத் தேவைகள் – Safety Needs

உடலியல் தேவைகளுக்கு அடுத்ததாக மனிதன் பாதுகாப்புத் தேவையை நோக்கித்தான் செல்வான். அதனால் பிரமிட்டினுடைய இரண்டாவது மட்டத்தில் பாதுகாப்புத் தேவைகள் காணப்படுகின்றன.

பாதுகாப்பு என்று சொல்லும் போது மனிதனுடைய உடலினைப் பாதுகாப்பதற்கான உடை, ஆரோக்கியம், வசிப்பதற்கான வீடு, வாழ்வதற்குத் தேவையான பணம் போன்றவை உள்ளடங்குகின்றன. மனிதனுடைய வாழ்க்கைக்கு எவையெல்லாம் பாதுகாப்பளிக்கின்றதோ அவையெல்லாம் பாதுகாப்புத் தேவைகளுள் உள்ளடங்குகின்றன.

03. சமூகத் தேவைகள் – Social Needs

பாதுகாப்புத் தேவை மனிதனுக்கு கிடைத்துவிட்டால் அடுத்து மனிதன் சமூக தேவைகளை நோக்கி தூண்டப்படுவான்.

சமூகத் தேவைகளுள் அன்பு, காதல், உறவுகள், நண்பர்கள் போன்ற தேவைகள் உள்ளடங்குகின்றன. இவற்றை விட சமூகம் சார்ந்த செயற்பாடுகள், மதம் சார்ந்த செயற்பாடுகள், சமூகக் குழுக்கள் போன்ற தேவைகள் உள்ளடங்குகின்றன.

04. சுய மரியாதை – Self Esteem

சமூகத்தேவைகளிற்குப் பின்னர் அடுத்து மனிதன் மதிப்பு, மரியாதை போன்ற விடயங்களை நோக்கி நாடிச்செல்வான்.

தான் சுய மரியாதையுடன் வாழ வேண்டும், மற்றவர்களுக்கு மத்தியில் தனக்கென்று மதிப்பு இருக்க வேண்டும் என்று எண்ணுவது இங்குதான். இங்கே மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டு, மதிப்பு, சுய மரியாதை, தன்னம்பிக்கை, சுதந்திரம் போன்ற தேவைகள் உள்ளடங்குகின்றன.

05. தன்னலம் – Self Actualization

மாஸ்லோவின் தேவை படிநிலைக் கோட்பாட்டின் இறுதியில் தன்னலத் தேவைகள் காணப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் உள்ள தேவைகள் மனிதனின் வளர்ச்சிக்கு உதவுகின்ற தேவைகளாகவே உள்ளன.

சுய முன்னேற்றம், சுய விழிப்புணர்வாக செயற்படுதல், தன்னுடைய வளர்ச்சிக்கான செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்ற தேவைகள் உள்ளடங்குகின்றன.

இந்த மட்டத்தில் ஒரு மனிதனுக்கு எல்லாத் தேவைகளுமே கிடைத்த வெற்றிகரமான நிலை என்று சொல்லலாம்.


மாஸ்லோவின் தேவைக்கொள்கை அடிப்படைத் தேவைகள், உளவியல் தேவைகள், சுய நிறைவுத் தேவைகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியிருக்கின்றது. மாஸ்லோவின் தேவை படியமைப்புக் கோட்பாட்டில் உள்ள 5 தேவைகளையும் இரண்டு தொகுதிகளாக வகைப்படுத்தலாம்.

Deficiency Needs

உடலியல் தேவைகள், பாதுகாப்பு தேவைகள், சமூகத் தேவைகள், சுய மதிப்பு போன்ற முதல் நான்கு தேவைகளும் Deficiency Needs ஆகும். ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான உளவியல் சார்ந்த, பாதுகாப்பு சார்ந்த அடிப்படையான தேவைகள் இவையாகும்.

Growth Needs

மாஸ்லோவின் தேவைக் கோட்பாட்டின் இறுதியில் உள்ள தன்னலத் தேவை என்பது Growth Needs ஆகும். தனிமனிதன் ஒருவன் தன்னுடைய முழுமையான ஆற்றலை உணர்வதற்கான தேவைகள் இவையாகும். மனிதனின் அறிவுசார்ந்த ஆக்கபூர்வமான ஆற்றல் மூலமாக இத் தேவைகள் அடையப்படுகின்றன.


அடிப்படையில் மாஸ்லோவின் கோட்பாடானது 5 தேவைகளைக் கொண்டுள்ளது. ஆனால் 1970-ல் தன்னுடைய கோட்பாட்டுடன் மேலதிகமாக Cognitive Needs, Aesthetic Needs, Transcendence Needs ஆகிய மூன்று தேவைகளை மாஸ்லோ இணைத்துக் கொண்டார். ஆனால் பெரும்பாலும் மாஸ்லோ ஆரம்பத்தில் முன்வைத்த 5 தேவைகளைக் கொண்ட படிநிலைக் கோட்பாடுதான் பயன்படுத்தப்படுகின்றது.

எல்லா மனிதர்களுக்குமே தன்னலத் தேவைகளை அடைவதற்கான திறன் இருக்கின்றது. ஆனால் உலகில் நிறைய மனிதர்கள் பிரமிட்டின் மேல்மட்டத்தில் உள்ள தன்னலத்தேவைகளை அடைவதில்லை.

அதனைக் குறிக்கும் விதமாகத்தான் பிரமிட்டின் கீழ்பகுதியின் பருமன் பெரியதாகவும் மேல்பகுதியின் பருமன் சிறிதாகயும் உள்ளது. பெரும்பாலான மனிதர்கள் பிரமிட்டின் கீழ் மட்டங்களில்தான் இருக்கின்றார்கள்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு படிநிலையாக தேவைகளை நிறைவு செய்து மேலே செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். எல்லா தேவைகளும் பூர்த்தியடைகின்ற மேல் மட்டமான தன்னலத் தேவைகள் மட்டத்திற்கு செல்ல வேண்டும். அப்படி செய்தால்தான் நமது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக்கொள்ள முடியும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading