பட்டம் ஏற்றுதல்

Last updated on January 14th, 2024 at 05:34 pm

தைப்பொங்கல் பண்டிகை நெருங்கும் மார்கழி, தை மாதங்களில் வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தை அவதானித்துப் பார்த்தால் எல்லா நேரங்களிலும் பட்டங்கள் காற்றில் பறந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடியும். நமது பிரதேசங்களில் தைப்பொங்கல் பண்டிகைக்கு பட்டம் ஏற்றும் மரபு உள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமாக பட்டம் ஏற்றுவது சார்ந்த மரபுகள் இருக்கின்றன.

பட்டம் விடுதல் உலகளவில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்ற பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு என்று சொல்லலாம். பட்டம் விடுதல் இன்று தீடீரென உருவானதல்ல. பலநூறு ஆண்டுகளாகவே பட்டம் விடும் மரபு உலகளவில் இருந்துவருகிறது. சீனாவில் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்பே பட்டம் பறக்கவிடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆதிகாலத்திலிருந்தே இருந்தே உலகளவில் பல பிரதேசங்களிலும் பட்டம் விடுதல் கலாசாரத்தின், பண்பாட்டின் ஒர் அம்சமாக இருந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைக்கு பட்டம் விடுவது விழாவாகவும், போட்டியாகவும், பொழுதுபோக்காகவும் பல நாடுகளில் சிறப்பாக நடைபெறுகிறது.

அந்த வகையில், தமிழர்களிடம் பட்டம் விடும் மரபு உள்ளது. தைப்பொங்கல் பண்டிகை காலங்களில் பட்டம் விடுவது வழமையாக இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வடமராட்சி பட்டம் விடுவதில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. திருகோணமலையிலும் இந்த வழமை இருக்கின்றதென்று நினைக்கின்றேன். தைப்பொங்கலுக்காக வேறு எங்கு இந்த மரபு உள்ளது என்பது தெரியவில்லை. இது பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்.

தைப்பொங்கல் தினத்தில் பட்டம் ஏற்றும் வழக்கம் எப்படி ஆரம்பித்தது? என்பது தெரியவில்லை. ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. ஆனால் பட்டம் ஏற்றும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே இருந்துவருகிறது என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.

ஐப்பசி மாதம் தொடக்கம் தை மாதத்தின் தைப்பூசம் வரை பட்டம் ஏற்றுகிற காலமாக உள்ளது. இந்த காலத்தில் வானம் முழுவதும் நட்சத்திரங்களை போல பட்டங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

அதிலும், தைப்பொங்கல் தினத்தில் பட்டம் விடும் நிகழ்வு இல்லாமல் இருக்காது. தைப்பொங்கல் தினத்தன்று பட்டப்போட்டிகள், பட்டத்திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதில் வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா பிரபலமானது.

நிறைய இடங்களில் இராட்சத பட்டங்கள் பறக்கவிடப்படும் நிகழ்வுகள் நடைபெறும். இராட்சதப்பட்டங்கள் பறக்கவிடுவதை பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாகவே இருக்கும்.

பட்டங்களில் நிறைய வகைகள் இருக்கின்றன. படலப்பட்டம், பிராந்துப்பட்டம், கொக்குப்பட்டம், வௌவால்பட்டம், வட்டாக்கொடி, மணிக்கூட்டுப்பட்டம், தவளைப்பட்டம் போன்று பலவிதமான பட்டங்களை வானில் காணக்கூடியதாக இருக்கும். தற்போதைய நாட்களில் அதிகமாக வானில் படலப்பட்டத்தினை அவதானிக்க முடியும்.

நிறைய படலங்களை கட்டி வரிசையாக தொடுத்து ஏற்றுவார்கள். தொடுத்து ஏற்றுவதை எல்லா இடங்களிலுமே அவதானிக்கலாம். வெறுமனே ஒரு பட்டத்தை பறக்கவிடுவது மட்டுமல்லாமல் அவற்றில் விண் பூட்டி ஏற்றுவார்கள். விண் பூட்டி ஏற்றினால் பட்டம் வானில் சத்ததுடன் பறக்கும்.

பட்டத்தை தொடுத்துவிடும் போது அதில் வண்ணமயமான மின்விளக்குகளை( Lights ) பூட்டியும் ஏற்றுவார்கள். இரவு நேரத்தில் வானில் வண்ணமயமான மின்விளக்குகள் ஒளிர்ந்து பட்டம் பறந்தால் எப்படியிருக்கும்? இரவு நேரத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இதே போன்று பல பல விநோதங்களை பட்டங்களில் அவதானிக்க முடியும்.

பட்டம் ஏற்றுவது என்றாலே பொதுவாக சொல்லமுடியாததொரு வேடிக்கையாக இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு தெரியும். பட்டம் ஏற்றுவது சிறந்த பொழுதுபோக்கு என்பதுடன் சிறந்ததொரு கலை. பட்டம் கட்டுவதிலும், ஏற்றுவதிலும் பல்வேறு நுட்பங்கள் இருக்கின்றன. பட்டம் ஏற்றும் கலையை பாதுகாக்கவேண்டியது அவசியம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading