திருக்கார்த்திகை தீபம்

திருக்கார்த்திகை தீபம் என்று அழைக்கப்படுகின்ற கார்த்திகை தீபம் தமிழர்களால் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருநாளாகும். இன்றைக்கு தமிழ் மக்களால் கொண்டாடப்படும் சில பண்டிகைகள் சமீப காலங்களிலேயே தமிழர்களால் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தீபாவளிப் பண்டிகையை சொல்லலாம். ஆனால் கார்த்திகை தீபம் ஆதிகாலந்தொட்டே தமிழர்களால் தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றமை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

கார்த்திகை மாதம் பல்வேறு கடவுள் சார்ந்த திருநாட்களைக் கொண்ட மாதம். இந்த மாதத்தில் பௌர்ணமியும் காரத்திகை நட்சத்திரமும் இணைந்து வருகின்ற திருநாளில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகின்றது.

சைவசமயத்தைப் பொறுத்தவரை தீபமேற்றி இறைவனை வழிபடுவது மிகச்சிறந்த வழிபாடாக பின்பற்றப்படுகின்றது. விளக்கேற்றி இறைவனை வழிபடுவதைப் பற்றிய நாயன்மார் பாடல்கள், கதைகள், வரலாறுகள் சைவசமயத்தில் நிறையவே காணப்படுகின்றன.

கார்த்திகை தீபமும் அவ்வாறனதொரு திருநாள்தான். விளக்கு ஏற்றி வழிபடுவதால்தான் கார்த்திகை விளக்கீடு என்றும் கார்த்திகை தீபம் அழைக்கப்படுகின்றது. இறைவனை ஜோதி வடிவாகப் பார்க்க வேண்டும். இறைவனாகிய அந்த ஜோதி இருளை அழித்து ஒளியை வழங்குவதை கார்த்திகை தீபம் உணர்த்துகின்றது.

கார்த்திகை தீபம் மூன்று நாட்கள் மூன்று விதமான தீபங்களாக கொண்டாடப்படுகின்றது. குமராலய தீபம், விஷ்ணுவாலய தீபம், சர்வாலய தீபம் போன்றவையே அவையாகும்.

குமரன் என்பது முருகனைக் குறிக்கின்ற சொல். குமராலய தீபம் என்ற பெயரில் இருப்பதைப் போலவே முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்ற தீபம் குமராலய தீபம் ஆகும். அதே போன்று விண்ணுவாலய தீபம் விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. சர்வாலய தீபம் மற்றைய எல்லா ஆலயங்களிலும் கொண்டாடப்படுகின்றது.

சர்வாலய தீபத்திலேயே வீடுகளிலும் தீபமேற்றி கொண்டாடப்படுகின்றது. சர்வாலய தீபத்திலே வீட்டின் வாசலில் வாழைத்தண்டு நட்டு வைத்து அதன்மேல் தீபம் ஏற்றப்படும். அதே நேரம் வீட்டினுள் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி தீபத்தினால் இறைவனை வழிபடப்படும். 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் விதமாக 27 விளக்குகள் ஏற்றுவது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

ஆலயங்களில் நடைபெறும் கார்த்திகைதீப நிகழ்வுகளில் சொக்கப்பனை கொளுத்துதல் நிறைய ஆலயங்கள் நடைபெறுகின்ற விசேடமான நிகழ்வு. சொக்கப்பனை கொளுத்துவது என்பது உலர்ந்த தென்னை, பனை, வாழை, கமுகு போன்ற மரங்களின் ஒலைகளை வைத்து அடைத்து கொளுத்தப்படும் நிகழ்வாகும்.

கார்த்திகை தீபம் நிறைய ஆலயங்களில் சிறப்பான வழிபாடுகளுடன் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. சில இடங்களில் நடைபெறும் கார்த்திகைதீப நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. அவற்றுள் இந்தியாவில் தமிழ் நாட்டில் திருவண்ணாமலை ஆலயத்தில் நடைபெறும் கார்த்திகைதீப நிகழ்வுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

திருவண்ணாமலை ஆலயத்தின் கார்த்திகை தீபத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாளான இறுதி நாளில் பரணிதீபம், மகாதீபம் எனும் இரண்டு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அவற்றுள் கார்த்திகைதீப நாளில் மாலை ஆறு மணிக்கு மலையின் உச்சியில் ஏற்றப்படுகின்ற மகாதீபம் மிகவும் பிரண்மாண்டமான தீபமாகும். திருவண்ணாமலை ஆலயத்தில் தீபம் ஏற்றப்பட்ட பின்னரே அங்குள்ள வீடுகளில் தீபம் ஏற்றப்படும்.

தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகின்றது. நாமும் இருளாகிய துன்பங்களைப் போக்கி ஒளியாகிய நன்மைகளை உண்டாக்கும்படி கார்த்திகை தீபத்திருநாளில் தீபத்தின் வழியாக இறைவனை வழிபடுவோம். கார்த்திகை தீபத்தை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading