கள்ளிக்காட்டு இதிகாசம்

கள்ளிக்காட்டு இதிகாசம் வாசித்து முடித்துவிட்டேன். தமிழில் கட்டாயமாக வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இணையத்தில் பலரும் இந்நூலை பரிந்துரை செய்தார்கள். அந்த வகையில் வாசிக்க ஆரம்பித்ததுதான் வைரமுத்து அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம். கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் ஆகச்சிறந்தது என்று சொல்ல முடியாது என்ற விமர்சனங்களையும் நிறையப்பேர் எழுதியிருந்தார்கள். எனக்கு அவ்வளவு நிறைய நூல்களை வாசித்த அனுபவம் இல்லை. நான் புத்தக வாசிப்பிற்கு புதியவனாகையால் இதனைப் பற்றி என்னால் கூறமுடியாது. கள்ளிக்காட்டு இதிகாசம் வாசித்த போது எவ்வாறான அனுபவத்தைக் கொடுத்தது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம்.

கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதும் இதிகாசம் என்ற தலைப்பே வித்தியாசமாகத் தோன்றியது. இந்நூலிற்கு இதிகாசம் என்று பெயரிட்டதற்கான காரணத்தையும் நூலின் ஆரம்பத்திலேயே வைரமுத்து அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். “இதிகாசம் என்பது நிச்சயமாக நடந்தது என்று பொருள். இந்த இதிகாசமும் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்தது” என வைரமுத்து குறிப்பிடுகின்றார்.

இந்நாவலின் கதை உண்மையில் நடந்த கதைதான். 1958-ல் வைகை அணை கட்டப்பட்ட போது அருகிலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட உண்மை நிகழ்வை வைத்து கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் எழுதப்பட்டுள்ளது. வைகை அணை கட்டப்பட்ட போது சிறுவயதாக இருந்த வைரமுத்து அவர்கள் அங்குள்ள கிராமொன்றிலிருந்துதான் வெளியேறினார். “அழுது கொண்டே ஊரைவிட்டு வெளியேறும் அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டே இடுப்பளவுத் தண்ணீரில் நனைந்த கால் சட்டையோடு தானும் அழுது வெளியேறுகிறான் ஒர் ஐந்து வயதுச் சிறுவன்” என்று தன் அனுபவத்தை விபரித்திருக்கின்றார் வைரமுத்து அவர்கள். வைரமுத்துவின் அந்த அனுபவ உணர்வினால் உதித்ததுதான் கள்ளிக்காட்டு இதிகாசம்.

ராஜாக்களுக்கு இதிகாசம் உண்டு. குடியானவனுக்கு இதிகாசம் உண்டோ? இதுவொரு குடியானவனின் இதிகாசம் என்று நூலின் ஆரம்பத்தில் வைரமுத்து கூறியது போன்று பேயத்தேவர் என்ற சாதாரண மனிதனை மையமாக வைத்து இறுதிவரை கதை நகர்கின்றது. தன்னுடைய தாய்வழித் தாத்தா, தந்தை வழித் தாத்தா இருவரது குணங்களையும் ஒன்று சேர்த்த போது உருவானதுதான் பேயத்தேவர் என்ற காதாப்பாத்திரம் என்று ஒர் விளக்கத்தை வைரமுத்து தருகின்றார்.

இனி, கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் எப்படியிருக்கின்றது என்று பார்ப்போம். கிராமம் என்றாலே பச்சைப் பசேல் என்று இயற்கை வனப்பு நிறைந்திருப்பதுதான் நம் மனதில் தோன்றும். ஏனெனில் பெரும்பாலும் திரைப்படங்கள், கதைகள், நாவல்களில் அவ்வாறுதான் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் வித்தியாசமாக வரண்ட நிலத்தை கதைக்களமாக கொண்டமைந்ததுதான் கள்ளிக்காட்டு இதிகாசம்.

கள்ளிப்பட்டி என்ற கிராமத்தின் மனிதர்களின் வாழ்வியலை இந்நாவல் சொல்கின்றது. 1950-களில் மழை மறந்துவிட்டுச் சென்ற ஒர் கிராமம் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ள கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை வாசிக்கலாம். தெரிந்துகொள்வதற்கு நிறைய இருக்கின்றன இந்நாவலில்.

நாவலில் வருகின்ற கதை மாந்தர்களில் கதைநாயகனான பேயத்தேவரைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். நாவலில் பேயத்தேவருக்கு தொடர்ச்சியாக பிரச்சினைகளும், சோகமும், துன்பமும்தான் வந்துகொண்டேயிருக்கும். மகிழ்ச்சியான தருணங்கள் குறைவுதான். தொடர்ச்சியாக வாசிக்கும் போது ஒரு மனுசனை இப்படிப்படுத்துறீங்களே என்று நிச்சயமாகத் தோன்றும்.

வாழ்க்கையில் அடிமேல் அடியாக விழுந்தாலும், துன்பம் மேல் துன்பம் வந்தாலும், சோதனை மேல் சோதனை வந்தாலும் எப்படியிருக்க வேண்டுமென்றால் பேயத்தேவர் போன்று இருக்க வேண்டும் போல. பேயத்தேவர் என்ற கதாப்பதாத்திரம் அப்படியே மனதில் பதிந்துவிடும்.

பேயத்தேவர் தவிர பேரன் மொக்கராசு, முருகாயி, மின்னல், அழகம்மா, செல்லத்தாயி, வண்டிநாயக்கர் என நிறைய கதாப்பாத்திரங்கள். வண்டிநாயக்கர் இடையிலே சில பகுதிகளில் மட்டுமே வந்தாலும் எனக்கு அக்கதாப்பாத்திரம் சுவாரஷ்யமாகத் தெரிந்தது. ஆனால் எனக்கு பேயத்தேவர் மனதில் பதிந்துகொண்ட அளவிற்கு மற்ற கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை.

இந்நாவலிருந்து நிறைய நிறைய விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. அன்றைய நாட்களில் கதையில் காட்டப்படுவதைப் போன்ற கிராமத்தில் வாழ்க்கை முறை எப்படியிருக்கும், உணவு முறைகள் எப்படியிருக்கும், மனிதர்களிற்கிடையேயான உறவு எப்படியிருக்கும், மனிதர்களிற்கிடையேயான பிரச்சினைகள், விவசாயம் எப்படியிருந்திருக்கும் அவற்றைத்தாண்டி சுடுகாட்டை பற்றி, சாராயம் காய்ச்சுவது போன்ற பல சுவாரஷ்யமான விடயங்களில் நமக்கு பயிற்சி வகுப்பே நடத்தியிருக்கின்றார் வைரமுத்து. ஏராளமான விடயங்களை நாவலிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

ஆரம்பத்திலிருந்து கள்ளிப்பட்டி என்ற கிராமத்தில் பேயத்தேவரை சுற்றி நடக்கின்ற விடயங்களோடு நகர்ந்து சென்று இறுதிப்பகுதி வைகை அணை கட்டப்பட்ட போது கள்ளிப்பட்டி மற்றும் சில கிராமங்கள் நீரில் மூழ்கப்போவதால் அக்கிராமங்களை விட்டு வெளியேறுகின்ற மக்களின் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூல் எதைப் பற்றியது என்று தெரியாமல் முன்னுரையையும் படிக்காமல் இந்நாவலை வாசிக்க ஆரம்பித்தால் முக்கால்வாசி நாவலை தாண்டும் போதுகூட வைகை அணை கட்டப்பட்ட போது மக்கள் வெளியேறுவதாக முடிவு அமையும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டேன் என்பதுதான் உண்மை.

இணையத்தில் நூலைப்பற்றி வாசித்த போதும் வைரமுத்துவின் முன்னுரையை வாசித்த போதும் வைகை அணை கட்டப்பட்ட போது நீரில் மூழ்கப்போகும் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதைப் பற்றிய கதை போன்று தெரிந்தது. நான் நினைத்தேன் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வைகை அணை கட்டப்பட்டு மக்கள் வெளியேறுவதை மையமாகக்கொண்டு கதை நகரும் என்று.

ஆனால் ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக கள்ளிப்பட்டி என்ற கிராமத்தின் வாழ்வியலையும் இறுதியில் வைகை அணை கட்டப்பட்ட போது அருகிலிருந்த கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறும் நிகழ்வையும் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் காணமுடிகின்றது.

நீங்கள் இதுவரை திரைப்படங்களில் பார்க்காத வித்தியாசமான கிராமத்தின் வாழ்வியலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை வாசிக்கலாம். இந்நாவல் உங்களுக்கும் சுவாரஷ்யமாக இருக்கும் என்றுதான் எண்ணுகின்றேன்.

நீங்கள் கள்ளிக்காட்டு இதிகாசம் வாசித்திருந்தால் இந்நாவல் பற்றிய உங்களுடைய கருத்துக்களைக் கூறுங்கள். வேறு எந்த நாவல்கள் வாசிக்கலாம் என்பது பற்றியும் உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading