ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவம்

உணவு மனிதனின் உயிர்வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் மனிதன் மற்றைய தேவையில்லாத விடயங்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதற்கு கொடுப்பதில்லை. பெரும்பாலான மனிதர்கள் ஆரோக்கிய உணவின் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வதில்லை.

மனிதன் இயங்குவதற்குத் தேவையான பெரும்பாலான சக்திகள் உணவிலிருந்தே கிடைக்கின்றன. மனிதனின் ஆரோக்கியத்தில் நேரடியாக செல்வாக்குச் செலுத்தக்கூடிய காரணிகளில் உணவு முக்கியமானதாக இருப்பதால் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் வகை வகையாக நிறைய உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். உலகமயமாதலின் விளைவாக உணவு சம்பந்தமான நிறுவனங்களும் வணிகங்களும் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றன. இன்றைய சமூகத்தில் மேற்கத்தைய நாகரிகத்தின் தாக்கம் உள்ளதால் உணவிலும் அத்தாக்கம் செல்வாக்குச் செலுத்துகின்றது. அதாவது உலகம் நவீனமயமாவதைப் போலவே உணவும் நவீனமயமாகிக் கொண்டிருக்கின்றது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

உணவு நவீனமயமாவதெல்லாம் சரி ஆரோக்கியமானதாக உள்ளதா? என்று பார்த்தால் அங்குதான் பிரச்சினை. நிறைய உணவுகள் ஆரோக்கியமானதாக இல்லை. உணவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் அந்த உணவுகளை எடுத்துக்கொள்கின்ற முறையே ஆரோக்கியமில்லாத ஒன்றாக மாறிவிடுகின்றது.

ஆரோக்கியமான உணவு என்று சொல்கின்றோம். ஆரோக்கியமான உணவு என்றால் என்ன? என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு என்பது மனிதனுடைய வளர்ச்சிக்கு உதவி செய்யும், மனிதன் இயங்குவதற்குத் தேவையான சக்தியை தரக்கூடியவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும் தரமான உணவுகளைத்தான் ஆரோக்கியமான உணவு என்று சொல்கின்றோம்.

அப்படிப் பார்க்கும் போது இயற்கையில் கிடைக்கின்ற உணவுகள் ஆரோக்கியமானவையாக இருக்கும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். அதே போன்று இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளும் ஆரோக்கியமானவையாகவே இருக்கும். பொதுவாக இயற்கையுடன் இணைந்த உணவுகள் ஆரோக்கியமானவையாகவே இருக்கும்.

அதற்காக இயற்கையுடன் இணைந்த உணவுகள் என்பதால் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எடுத்துக்கொண்டால் நல்லதில்லை. நமக்குத் தேவையானவற்றை மட்டும் சரியான முறையில் எடுத்துக்கொண்டால் அவை ஆரோக்கியமானவையாக அமையும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அந்தப் பழமொழி உணவு விடயத்தில் நூறு சதவீதம் பொருந்தக்கூடியது.

இன்றைக்கு இயற்கையுடன் இணைந்ததான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் குறைவு. செயற்கையுடன் இணைந்த உணவுகள், துரித உணவுகளை எடுத்துக்கொள்வது அதிகமாகியுள்ளது. இவற்றை ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் இல்லாத உணவுகள் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் இவை மனிதனின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது நமது உடல், உள்ளத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும். இல்லாவிட்டால் நாம் விரும்புகின்ற மாதிரி உடலாரோக்கியத்தைப் பேணுவது முடியாத காரியமாகவே இருக்கும்.

ஆரோக்கிய உணவின் முக்கியத்துவம் விளங்காமல் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமில்லாத உணவு முறையைப் பின்பற்றுவது எதிர்மறையான தாக்கங்களை எற்படுத்துகின்றன.

முக்கியமாகப் பார்த்தால் ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கவழக்கங்கள் பல விதமான நோய்களைக் கொண்டுவருகின்றன. இன்று நிறைய மக்களிடையே இதய நோய்கள், நீரிழிவு, புற்று நோய், உடற்பருமன் போன்றவை உருவாவதற்கு உணவு முறை பிரதான காரணமாக உள்ளது. நிறைய மக்களின் இறுதிக்காலத்தில் உடல்நிலை மோசமானதாக அமையக் காரணம் இளவயதில் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றத்தவறி நோய்களுக்குள் சிக்கிக் கொண்டதாலாக இருக்கும். ஆயுட்காலம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது முக்கியம்.

இன்று மக்களின் உணவு பற்றிய எண்ணங்களிலும் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஆரோக்கியமான உணவைத் தெரிவு செய்வதற்கு மக்கள் தயாரில்லை. தமக்கான உணவை தாமே தயாரித்துக்கொள்வதற்கும் பலர் தயங்குகின்றார்கள். செயற்கை உணவுகள், உடனடி உணவுகளை எடுத்துக்கொள்வதைப் பற்றி யோசிப்பதும் கிடையாது.

ஆரோக்கியமான உணவின் மூலமாக ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமென்றால் நமக்குத் தேவையான உணவை சரியாக தெரிவு செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை நாமே தயாரித்துக்கொள்ளலாம். உடனடி உணவுகளையெல்லாம் தவிர்த்திடலாம்.

நமது உணவில் பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம். அதே போல தானியங்கள், கடலுணவுகள் என வித்தியாசமான இயற்கையான சத்துக்களைக் கொண்ட உணவுகளை முயற்சி செய்யலாம்.

Food

ஆரோக்கியமான உணவு என்று சொல்லும் போது வெறுமனே உணவுகள் என்று மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது. மென்பானங்களைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும். மென்பானங்கள் எந்தளவுக்கு கெடுதலை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். ஆரோக்கியமான உணவு என்று வரும்போது அளவுக்கதிகமாக மென்பானங்கள் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.

மென்பானங்கள் எடுத்துக்கொள்கின்றோமோ இல்லையோ தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் அத்தியாவசியமானது. மென்பானங்களுக்கு மாற்றாக இளநீர் போன்ற இயற்கையான பானங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டுமென்றால் இது போன்ற நிறைய விடயங்களைப் பின்பற்றலாம்.

என்னதான் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்துவிட்டு ஆரோக்கிய உணவின் முக்கியத்துவம் உணர்ந்து உண்ண வேண்டும் என்று கூறினாலும் நிறைய மனிதர்களால் உடனடியாக உணவு முறையை மாற்றிவிட முடியாது. அதே மாதிரி துரித உணவு, செயற்கை உணவு, மென்பானங்களை ஒட்டுமொத்தமாக தவிர்த்துவிட்டு நூறு சதவீதம் இயற்கையான அல்லது வீட்டிலேயே தயாரிக்கப்படுகின்ற உணவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டு வாழ்வது இன்றைய காலகட்டத்தில் கடினமானதாக இருக்கலாம்.

அதனாலே எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவு முறையை அமைத்துக்கொள்ள முடியுமோ அந்தளவுக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியமானது. நாம் ஆரோக்கிய உணவின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டால் உணவையே மருந்தாக மாற்றி ஆரோக்கியமானதொரு வாழ்க்கையை வாழமுடியும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading