கவனத்தை அதிகரிப்பதற்கான வழிகள்

இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற உங்களுக்கு Super Power ஒன்று வேண்டும் என்று விரும்பினால் கவனம் (Focus) என்பது மிகச்சிறந்த சக்தியாக இருக்கும். இன்றைய டிஜிற்றல் உலகில் கவனத்தைச் சிதறடிக்க ஏராளமான விடயங்கள் வந்துவிட்டன. மொபைலிலிருந்து வருகின்ற அறிவிப்பு சத்தமே (Notification Sound) கவனத்தை திசை திருப்ப போதுமானதாக உள்ளது. அவற்றையெல்லாம் தாண்டி ஓர் வேலையை தொடர்ச்சியாக கவனத்துடன் செய்ய முடியுமானால் அது ஒர் மிகச்சிறந்த சக்திதானே.

கவனம் என்ற பண்பு நம்மிடம் இருந்தால் நமது இலக்குகளை அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தப் பதிவிலே கவனத்தை அதிகரிப்பதற்கான வழிகள் பற்றி பார்க்கப்போகின்றோம். நீங்கள் கவனச்சிதறலிலிருந்து விடுபட்டு கவனத்தை அதிகரிக்க இந்தப் பதிவு உதவியாகவிருக்கும்.

01. மொபைல் பயன்பாட்டை குறைத்தல்

Mobile

எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது மக்களிடையே கவனச்சிதறல் பிரச்சினை அதிகரித்திருக்க பிரதான காரணம் அளவுக்கதிகமான மொபைல் பயன்பாடு. மொபைலில் உள்ள செயலிகளும் சமூகவலைத்தளங்களும் உங்களுடைய கவனத்தை ஈர்த்து அந்த செயலிகளை பயன்படுத்த வேண்டுமென்பதற்காகவே வடிவமைத்திருக்கின்றார்கள்.

நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது மொபைலில் கவனத்தை கொடுப்பது கவனச்சிதறலை குறிக்கின்றது. ஒர் வேலையை தொடங்குவதற்கு முன்னரே செய்ய வேண்டியது உங்களுடைய மொபைலை அணைத்து (Switch off) தூரமாக வைத்துவிட வேண்டும். வேலை ஒன்றைச் செய்யும் போது மொபைல் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இதனால் வேலை செய்யும் போது அறிவிப்புக்கள் (Notification) வந்து உங்களை தொந்தரவு செய்யாது. செய்கின்ற வேலையில் முழுக்கவனத்தை செலுத்தி ஈடுபட முடியும்.

02. செயற்பாடுகளை ஆழ்ந்து செய்ய வேண்டும்

Deep Work

நீங்கள் செய்கின்ற வேலைகளை Deep Work, Shallow Work என்று இரண்டு வகையாக வகைப்படுத்திக்கொள்ள முடியும். Deep Work (ஆழமான வேலை) என்பது குறிப்பிட்ட நேரம் எந்தவொரு கவனச்சிதறலும் இல்லாமல் ஒரேயொரு வேலையை மட்டும் கவனக் குவிப்புடன் செய்வதாகும். Shallow Work என்பது ஒரே நேரத்தில் பல வேலைகளுக்குள் கவனம் செலுத்துவதைக் குறிக்கின்றது.

நமது செயற்பாடுகளில் கவனத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் ஆழ்ந்து வேலையைச் செய்ய வேண்டும். ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமல் பல வேலைகளில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவதால் கவனம் சிதறி ஒரு வேலையிலும் கவனத்தைக் குவிக்க முடியாத சூழ்நிலை உருவாகின்றது.

03. சரியான சூழலை அமைத்துக்கொள்ளல்

கவனச்சிதறல் இல்லாமல் முழுமையான கவனத்துடன் வேலை செய்ய வேண்டுமென்றால் சரியான சூழல் ஒன்றை உருவாக்கிக்கொள்வது அவசியம். கவனச்சிதறலுக்கான அத்தனை வாய்ப்புகளும் கொண்ட சத்தம் அதிகமாகவுள்ள ஒரு சூழலில் கவனத்தை குவித்து வேலை செய்வது நடக்காத காரியம்.

இதுவே கவனச்சிதறலுக்கான வாய்ப்புகள் இல்லாத, அமைதியான, வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் அமையுமானால் அங்கே வேலை செய்வதற்கான மனநிலை உருவாகும். ஏனெனில் கவனத்தை திசைதிருப்ப எதுவும் இருக்கப்போவதில்லை எனில் வேறு எப்படி கவனம் இல்லாமல் போகும். அதனால் கவனம் தேவை என்றால் சரியான சூழலை முதலில் அமைத்துக்கொள்ள வேண்டும்.

04. தியானம் செய்தல்

தியானம் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சி. கவனம் சிதறுவதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருப்பதனால் ஆகும். ஒரே நிலையில் நின்று ஒரு வேலையில் கவனம் செலுத்த மனதால் முடிவதில்லை. அதனால் ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கும் போது தேவையில்லாத வேறு சிந்தனைகளில் செல்வீர்கள்.

இவற்றுக்கெல்லாம் தியானப் பயிற்சி ஒரு தீர்வாக இருக்கும். தியானத்திற்காக தினமும் குறிப்பிட்டளவு நேரம் ஒதுக்கலாம். தியானத்தில் தொடர்ச்சியாக ஆழமாக ஈடுபடும் போது ஒரே வேலையில் கவனத்தைக் குவிப்பதற்கான திறனை இலகுவாக கொண்டுவரக்கூடியதாக இருக்கும்.

05. செய்ய வேண்டிய செயற்பாடுகளை வரிசைப்படுத்துதல்

To Do List

To Do List உங்களுக்குத் தெரியும்தானே? To Do List என்பது குறிப்பிட்ட நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பட்டியற்படுத்திக் கொள்வதாகும். ஒரு நாளிற்கான திட்டமிடலுக்கு To Do List உதவியாக இருக்கும்.

நீங்கள் காலையில் நித்திரையிலிருந்து விழிக்கிறீர்கள். இன்றைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென எந்தத் திட்டமும் இல்லையென்றால் என்னவாகும். ஆயிரம் வேலைகள் முடிப்பதற்கு இருந்தாலும் வேலைகளின் பக்கம் கவனம் செல்வதற்குப் பதிலாக மொபைலின் பக்கம்தான் உங்களுடைய கவனம் செல்வதற்கு தூண்டப்படுவீர்கள்.

இதுவே காலையில் எழுந்த உடனே முதல் நாளே குறித்து வைத்துக்கொண்ட திட்டமிடல் பட்டியல் கைகளில் இருந்தால் முதலில் இந்த வேலையை முடிக்க வேண்டும், இத்தனை மணிக்கு இதனைச் செய்ய வேண்டும் என்ற தெளிவு இருப்பதால் அந்தந்த நேரத்திற்கு அந்தந்த வேலைகளைச் செய்வதற்கு தூண்டப்படுவீர்கள் என்பதால் உங்களுடைய கவனம் வேறு பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவடையும்.

06. இலக்குகளை உருவாக்குதல்

உங்களுக்கென்று ஒர் இலக்கு இருக்கின்றது என்றால் அதனை நோக்கிச் செல்வதற்காக நமது நேரத்தை பயன்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் தேவையில்லாத கவனத்தை சிதறடிக்கின்ற விடயங்களுக்குள் ஈடுபடுத்திக்கொள்வது குறைவடையும்.

அதனாலே இலக்குகள் இல்லாவிட்டால் இலக்குகளை உருவாக்கிக்கொள்ளுங்கள். இலக்கு என்றவுடன் வாழ்வின் இலட்சியமாக, விருப்பமான விடயமாக இருக்க வேண்டும் என்று யோசிக்கக் கூடாது. நீங்கள் செய்துகொண்டிருக்கின்ற வேலையில் இன்றைக்கு இவற்றையெல்லாம் செய்து முடித்துவிட வேண்டும், இந்த வாரத்திற்குள் இவற்றை படித்து முடிக்க வேண்டும் போன்றவையும் இலக்குகளே.

நீங்கள் ஒவ்வொரு தடவையும் கவனச்சிதறலுக்கு உட்படும் போது இன்றைக்குள்ளே இந்தெந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் உங்களை வேலையைத் தொடர்வதற்கு உந்துதலாக இருக்கலாம். ஆகவே எந்த செயற்பாடாக இருந்தாலும் முதலில் இலக்கொன்றை உருவாக்க வேண்டும்.

07. உடல் உள ஆரோக்கியம்

உடல் உள நலத்திற்கும் கவனச்சிதறலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். கவனத்திற்கும் உடலுக்கும் உளத்திற்கும் இடையே நிறையவே தொடர்புகள் உள்ளன.

உதாரணமாக நீங்கள் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாமல் விழித்திருந்துவிட்டு காலையில் வேலை செய்யும் போது முழுமையான கவனத்துடன் வேலை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக முடியாது. நித்திரையைப் போன்றே பசி, தாகம், உடல் உபாதைகள், பிணி, மனநிலை, போன்ற மாதிரியான விடயங்களும் கவனச்சிதறலில் பங்களிப்புச் செய்யும்.

அதனாலே நமது கவனச்சிதறலை தடுத்து வினைத்திறனாக வேலைகளைச் செய்வதற்கு உடல் உள ஆரோக்கியத்தை சரியாகப் பேணுவது நல்லது. அடிப்படையான நித்திரை, உடற்பயிற்சி, உணவு, மனநிலை போன்றவற்றில் கவனமெடுப்பது அவசியம்.

08. சுய ஒழுக்கம்

Self Discipline

கவனச்சிதறலை தவிர்த்து கவனத்தை அதிகரிப்பதற்கு பல வழிகளைக் கூறினாலும் எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று உள்ளது. அதுதான் சுய ஒழுக்கம்.

இந்த வேலையை முடிக்கும் வரை மொபைலை தொடவே மாட்டேன், என்ன நடந்தாலும் இதனைச் செய்து முடிக்கும் வரை நகரவே மாட்டேன் என்று தீர்மானமாக உறுதியுடன் இருக்க வேண்டும். அந்தளவிற்கு சுய ஒழுக்கம் உங்களிடம் இருந்தால் கவனம் தானாகவே வரும்.

கவனத்தை அதிகரிப்பதற்கு கூறுகின்ற வழிகளைப் பின்பற்றுவதற்கும் சுய ஒழுக்கமே அவசியம். சுய ஒழுக்கத்தை கொண்டிருந்தாலே நினைத்ததை செய்து முடிக்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading