இணையம் எப்படி செயற்படுகிறது

Last updated on February 12th, 2024 at 01:26 pm

இந்த நொடி இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் படிப்பதற்கு இணையம் உதவியாக இருக்கின்றது. இணையம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இந்தப் பதிவு உங்களை வந்து சேர்ந்திருக்காது.

இன்றைய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நம்மால் இணையம் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. கல்வி, வேலை, பொழுதுபோக்கு, பொருட்கள், உணவு என எல்லாம் இணையம் மூலமாகவே கிடைக்கின்றது. எல்லோருக்குமே ஏதோவொரு வகையில் இணையம் உதவியாக இருக்கின்றது.

உலகில் எந்தவொரு மூலையில் இருப்பவர்களையும் தொடர்புபடுத்துவதற்கு சில வினாடிகள் போதுமானதாக உள்ளது. இணையத்தினுடைய செயற்பாடு அந்த அளவிற்கு வேகமானதாக அமைந்திருக்கின்றது.

இணையம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான் ஆனால் இணையம் எங்கிருந்து வருகின்றது? எப்படி செயற்படுகின்றது? இணையம் யாருக்குச் சொந்தமானது? போன்ற மாதிரியான கேள்விகள் கேட்டால் பலருடமிருந்து பலவிதமான பதில்கள் வரும்.

இணையம் எங்கிருந்து வருகின்றது? எப்படிச் செயற்படுகிறது? என்பது பற்றிய பல்வேறு தகவல்களை இந்தப் பதிவு மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.

இணையத்தினுடைய ஆரம்பம்

இணையம் என்பது முதல் முதலாக கணணிகளை இணைத்து தகவல் பரிமாற்றம் செய்வதற்காக அமெரிக்க இராணுவத்தால் ஆர்ப்பாநெட் (Arpanet) என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது.

பின்னர் ஆர்பாநெட் அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகங்கள், ஆய்வுகூடங்களை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. 

பிற்காலத்தில் ஆர்ப்பாநெட் ஆனது உலகளவில் விரிவடைந்து இன்டர்நெட் (Internet) ஆக வளர்ச்சியடைந்தது. இன்டர்நெட் பல மடங்கு வளர்ச்சியடைந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது.

இணையம் எங்கிருந்து வருகின்றது

நமது சாதனத்திற்கு இணையம் எங்கிருந்து வருகின்றது என்று கேட்டால் எல்லோரும் சொல்லிவிடுவார்கள். பக்கத்திலிருக்கின்ற ரவரிலிருந்து (Tower) வருகின்றது. இணையம் அலை வடிவத்தில் உங்களுடைய சாதனத்திற்கு வந்து சேர்கின்றது.

ரவரிற்கு இணைக்கப்படும் இணைய இணைப்புக்கள் வடங்கள் (Cables) மூலமாக இணைக்கப்படுகின்றன. இதற்காக Fiber Optic Cables பயன்படுத்தப்படுகின்றன. அதே போல கண்டங்களிற்கிடையில் அல்லது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு  இணைக்கப்படும் இணைப்புக்களும் Fiber Optic Cables மூலமாகவே இணைக்கப்படுகின்றன.

Fiber Optic Cable

இந்த Fiber Optic Cables சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்தப்படுகின்ற கேபிள்கள் போன்று இருக்காது. மிகப்பெரிய அளவில் பலமானவையாக, அதிவேகமாக இணையத்தைக் கடத்தக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும். உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் Fiber Optic Cables பதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் கண்டங்களிற்கிடையில் இணையம் பரிமாறப்படுகின்றன.  

ஒவ்வொரு நாட்டிற்கும் இணையம் செய்மதித் தொழினுட்பம் (Satellite) மூலமாக வருகின்றது என்றுதான் பல பேர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இணையம் கடல் வழியாக Fiber Optic Cables மூலமாக வருகின்றது.

உலகம் முழுவதும் பதிக்கப்பட்டுள்ள கேபிள்களை வரைபடத்தில் பார்க்க Submarine Cable Map என்ற இணையத்தளத்தை பயன்படுத்த முடியும்.

கடலுக்கடியில் Fiber Optic Cable யாரால் பதிக்கப்படுகின்றது

Fiber Optic Cable உலகம் முழுவதும் பதிப்பதற்கென தனியாக ஒரு நிறுவனம் கிடையாது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தனியார் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் என உலகில் பல நிறுவனங்களும் சேர்ந்துதான் Fiber Optic வடங்களை பதிக்கின்றன.

கடலுக்கடியில் கண்டங்களிற்கிடையில் பதிக்கப்படும் Fiber Optic வடங்கள் ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு பகுதிகளிற்கும் சென்றடைகின்றன.

அதிலிருந்து நாட்டின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இணையம் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. ஒரு நாட்டிற்குள் இணைய இணைப்புக்களை ஐ ISP-கள் வழங்குகின்றன. ISP-களிடமே நாம் பணம் செலுத்தி இணைய இணைப்பை பெற்றுக்கொள்கிறோம்.

கடலுக்கடியில் பதிக்கப்பட்டிருக்கின்ற Fiber Optic Cable ஒன்றில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இணையம் தடைப்படாது. இணையம் இணைப்பிற்காக பல Fiber Optic Cables பதிக்கப்பட்டிருக்கும்.

நமது வீட்டிலிருந்து வேறொரு கண்டத்திற்கு அல்லது வேறொரு நாட்டிற்கு தரவுகள் அதிவேகமாக சென்றடைவதற்கும் அங்கிருந்து நமக்கு இங்கு தரவுகள் வந்தடைவதற்கும் காரணம் உலகம் முழுவதும் பரந்திருக்கின்ற இணைப்புக்கள்தான்.

தரவுகளை பரிமாற்றம் செய்வதற்கு உலகம் முழுவதும் சிலந்தி வலை போன்று நிறைய இணைப்புக்கள் இருக்கின்றன.

நாம் நிகழ்நிலையில் ஒரு விடயத்தை பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கான தரவுகள் ஏதோவொரு இடத்தில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி சேமிக்கப்பட்டிருந்தால் மட்டும்தான் நம்மால் அதனைப் பயன்படுத்த முடியும்.

நாம் பயன்படுத்துகின்ற இணையத்தளங்கள், செயலிகள் போன்றவற்றினுடைய தரவுகள் எங்கே சேமிக்கப்படுகின்றன. அவை அனைத்தும் வேறு வேறு நாடுகளில் உள்ள Server-களில் சேமிக்கப்படுகின்றன.

சேவையகங்கள் (Servers)

உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் Server-கள் இருக்கின்றன. நாம் பயன்படுத்துகின்ற வெப்சைட்டுக்கள், ஆப்கள், சேவைகள் போன்றவற்றின் எல்லா தரவுகளும் உலகில் இருக்கின்ற ஏதோவொரு Server-இல் சேமிக்கப்பட்டிருக்கும்.

அந்த Server-களிலிருந்துதான் தரவுகள் நமது மொபைலுக்கு அதிவேகமாக வந்தடைகின்றன. அது எப்படி வந்தடைகின்றது என்பதை ஆரம்பத்திலேயே பார்த்திருந்தோம்.

Server-களும், கடலுக்கடியில் பொருத்தப்பட்டிருக்கின்ற Fiber Optic வடங்கள், நாட்டில் உள்ளே இணைக்கப்பட்டுள்ள இணைப்புக்கள், நமது வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு போன்ற பல இணைந்துதான் இணையம் உருவாகுகின்றது.

ஒரு இணையத்தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் நமது நாட்டில் அல்லது அருகில் உள்ள நாடுகளில் அந்த இணையத்தளத்தின் Server இருந்தால் இணையத்தளம் வேகமாக இயங்கும். வேறொரு கண்டத்தில் இருந்தால் கொஞ்சம் மெதுவாகவே இயங்கும். மில்லிசெக்கன்கள் அல்லது சில செக்கன்கள் வித்தியாசப்படும். 

இதற்குக் காரணம் நமது நாட்டில் உள்ள Server என்றால் பக்கத்தில் உள்ள Server ஊடாக நம்மை வந்தடையும். இதுவே வேறொரு கண்டத்தில் தூரத்தில் இருந்தால் பல Server-களை கடந்து வந்தடையவேண்டும். இதன் காரணமாக நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

நீங்கள் ஒரு இணையத்தளம் உருவாக்குகின்றீர்கள் என்றால் உங்களது இணையத்தளத்தை எந்த நாட்டில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்குகின்றீர்களோ அந்த நாட்டில் Server-ஐ வைத்தால் அங்கே இணையத்தளம் வேகமாக இயங்கும்.

இணையம் யாருக்குச் சொந்தமானது

இணையம் என்பது தனி நபருக்கோ அல்லது தனி நிறுவனத்திற்கோ அல்லது ஒரு அரசாங்கத்திற்கோ சொந்தமானது கிடையாது. ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு நிறுவனங்களும் தனி நபர்களும் சேர்ந்து உருவாக்கியதே இணையம் ஆகும். எல்லோருக்குமே இணையத்தில் பங்கு இருக்கிறது என்று சொல்லலாம்.

யாருக்கும் இணையம் சொந்தமானது கிடையாது என்பதால் யாரும் இணையத்தை கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு நாடுகளும் விரும்பினால் தமது நாட்டில் இணையத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஒட்டுமொத்த இணையமும் என்னுடையதுதான் என்று யாரும் சொல்ல முடியாது. அதே போல ஒட்டுமொத்த இணையத்தையும் கட்டுப்படுத்தவும் முடியாது.

இன்று எல்லோருமே இணையத்தைப் பயன்படுத்துகின்றோம். இணையம் நமது எல்லோருடைய வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது. எல்லோரும் பயன்படுத்துகின்ற இணையம் எங்கிருந்து வருகிறது என்பது பலருக்கும் தெரியாமலேயே இருக்கின்றது. இணையம் எப்படிச் செயல்படுகிறது என்பதனை சொல்வதற்காகவே இந்த பதிவு.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading