கோபல்ல கிராமம்

Last updated on January 10th, 2024 at 09:10 pm

கோபல்ல கிராமம் நாவல் வாசித்து முடித்துவிட்டேன். தமிழில் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்கள் பட்டியலில் பலரால் முக்கியமாக கோபல்ல கிராமம் குறிப்பிடப்பட்டிருந்ததால் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். 1976 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்நாவலின் ஆசிரியர் கி.ராஜநாராயணன். நான் வாசித்த கி.ராஜநாராயணனின் முதல் படைப்பும் இதுவே.

நாவலின் கதை கோபல்ல கிராமத்தின் விடியலை விபரிப்பதுடன் ஆரம்பிக்கின்றது. கோபல்ல கிராமத்தில் உள்ள கோட்டையார் வீட்டை மையமாகக் கொண்டு கதை நகர்கின்றது.

பக்கத்தில் உள்ள கிராமத்திலே வீட்டில் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு புறப்படும் பெண் ஒருத்தி கோபல்ல கிராமத்தின் மங்கம்மா சாலையை வந்தடைகிறார். அங்குள்ள ஊருணியில் தண்ணீர் குடிக்க இறங்கும் போது அவளின் காதுகளில் உள்ள பாம்படங்களுக்காக திருடன் ஒருவனால் நீரில் அமிழ்த்தி கொல்லப்படுகிறார். கிருஷ்ணப்ப நாயக்கரால் திருடன் பிடிக்கப்பட்டு ஊர்ப் பொதுவுக்கு கொண்டு செல்லப்படுகின்றார்.

நாவலின் கதை இப்படியாகத்தான் நகர்ந்து செல்லப்போகின்றது என்று நினைத்தால் அதுதான் இல்லை. கோட்டையார் வீட்டில் நூற்று முப்பத்தேழு வயதுடைய மங்கத்தாயாரு என்ற பெயருடைய பூட்டி இருக்கின்றார். மங்கத்தாயாரு அம்மாள் மூலமாக கோபல்ல கிராமம் உருவாக்கப்பட்ட கதை சொல்லப்படுகின்றது.

நிஜத்திலே கி.ராஜநாராஜணனின் முன்னோர்கள் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து குடியேறியவர்கள். அவருக்கு கதைகளாகச் சொல்லப்பட்ட வரலாற்றை மங்கத்தாயாரு அம்மாள் மூலமாக புனைவாக வாசகர்களுக்கு சொல்லியிருக்கின்றார்.

மங்கத்தாயாரு அம்மாவால் விபரிக்கப்படும் கதை தெலுங்கு தேசத்தில் தொடங்குகின்றது. மங்கயத்தாயாரு அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரி பெயர் சென்னா தேவி. நாவலில் சென்னா தேவியின் அழகை விபரித்த விபரிப்பில் சென்னா தேவியை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. அவ்வளவு அழகாக இருப்பார் போல.

அழகு சில நேரங்களில் ஆபத்தில் முடியும் என்பது போன்ற சம்பவம் ஒன்று நடந்தது. தெலுங்கு தேசத்தை ஆண்ட துலுக்க ராஜா சென்னா தேவியின் அழகில் மயங்கி கல்யாணம் செய்து ராணியாக்க விரும்பினான். ஆனால் இவர்களுக்கு அதில் விருப்பமில்லை.

அதனால் துலுக்க ராஜாவிடமிருந்து தப்பித்து இறுதியாக வந்தடையும் இடந்தான் அரவ தேசம் என சொல்லப்படுகின்ற தமிழ் நாடு. ஆனால் சோகம் என்னவென்றால் வரும் வழியிலேயே சென்னா தேவி இறந்து விடுகிறார். அவர்களுடன் வந்த வேறு சிலரும் இறந்து விடுகிறார்கள். இறுதியாக வந்து சேர்ந்த மனிதர்கள் கள்ளிக்காட்டை அழித்து உருவாக்கியதுதான் கோபல்ல கிராமம்.

கோபல்ல கிராமம் நாவலின் கதை 1800-களில் நகர்கின்றது. நாவலில் வருகின்ற நிகழ்வுகள், சொல்லப்படும் தகவல்கள், வரலாற்றுச் சம்பவங்கள் தனக்கு கதைகளாக சொல்லப்பட்டவற்றை கி. ராஜநாராயணன் நாவலாக புனைந்திருக்கின்றார்.

நாவல் எப்படியிருக்கின்றது என்று கேட்டால் தொடர்ச்சியாக வாசிக்கக்கூடிய மாதிரியாகவே இருக்கின்றது. நகைச்சுவை வேண்டுமென்றால் அக்கையாவின் நகைச்சுவைகள் பல இடங்களில் வருகின்றன. சண்டைக் காட்சிகள் வேண்டுமென்றால் தீவட்டிக் கொள்ளைக்காரர்களை துரத்துகின்ற விபரிப்புகள் நன்றாகவே இருக்கின்றன. அழகா ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறீர்கள் என்றால் சென்னா தேவி உங்கள் கண்களுக்குள்ளே நிற்பார். இதே போன்று பல்வேறுபட்ட விடயங்களுடன் இரண்டு கதைகள் நகர்வதால் நாவல் சுவாரஷ்யமாகவே செல்கின்றது.

கோபல்ல கிராமம் நாவலை வாசித்து முடித்து விட்டதால் நாவல் வாசித்தது பற்றிய என்னுடைய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்திருக்கின்றேன். கோபல்ல கிராமம் நாவல் பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading