கேமிங் பற்றிய பொய்கள்

Last updated on February 8th, 2024 at 06:10 pm

கேமிங், வீடியோ கேம்ஸ் என்று சொன்னாலே ஏதோ தவறான செயலாகவும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதே குற்றம் என்கின்ற அளவுக்கு பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இதற்கான பிரதான காரணம் இணையம் மற்றும் ஊடகங்கள் மூலமாக கேமிங் பற்றிய நிறையவே எதிர்மறையான கருத்துக்கள் மக்களிடம் சென்றடைவதனால் ஆகும்..

உண்மையைச் சொன்னால் வீடியோ கேம்ஸ் விளையாடுவது பிழையான செயல் இல்லை. ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்றுதான் வீடியோ கேம்ஸ் விளையாடுவது என்று சொல்லலாம்.

கடந்த காலத்தை விடவும் தற்போது கேமிங் சம்பந்தப்பட்ட தொழிற்துறை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் கேமிங் துறையினுடைய வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்கும். இந்தப் பதிவின் மூலமாக கேமிங் மற்றும் வீடியோ கேம்ஸ் பற்றி தவறாக கூறப்படுகின்ற கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ள முடியும்.

கேம்ஸ் சிறுவர்கள் மட்டும்தான் விளையாடுவார்கள்

இது காலம் காலமாக நிறையப் பேரால் சொல்லப்படுகின்ற மிகப்பெரிய கட்டுக்கதை. நமது நாடுகளில் வீட்டில் கொஞ்சம் வளர்ந்தவர்கள் வீடியோ கேம்ஸ் ஆடினால் குழந்தை மாதிரி கேம்ஸ் ஆடிட்டு இருக்கிறாய் என்று கேட்பார்கள். இந்த அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

உண்மை என்னவென்றால் உலகளவில் பார்த்தால் வளர்ந்தவர்கள்தான் அதிகமாக வீடியோ கேம்ஸ் ஆடுகிறார்கள். இணையத்தில் உள்ள தரவுகளை வைத்து பார்த்தால் 18 வயதிலிருந்து 35 வயது இருப்பவர்களே அதிகமாக வீடியோ கேம்ஸ் ஆடுவதாக தெரிகின்றது.

அதே போல பெண்கள் யாரும் வீடியோ கேம்ஸ் ஆடமாட்டார்கள் என்றும் ஒரு கட்டுக்கதை இருக்கின்றது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் வீடியோ கேம்ஸ் ஆடுகிறார்கள். இணையத்தில் Content Creators மற்றும் Streamers ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் குறைவாகவே இருக்கின்றார்கள். இதை வைத்து நிறைய பேர் முடிவெடுக்கின்றனர். ஆனால் அது தவறு. சிறுவர்கள், வளர்ந்தவர்கள், பெண்கள், ஆண்கள் என எல்லோருமே வீடியோ கேம்ஸ் ஆடுகின்றார்கள்.

கேமிங் நேரத்தை வீணடிக்கின்ற பொழுது போக்கு

Gaming

நானும் இதற்கு முன் ஒரு பதிவில் வீடியோ கேம்ஸ் விளையாடுவது நேரத்தை வீணடிக்கின்ற செயல் என்று கூறியிருப்பேன். நீங்கள் ஒரு நாளில் முக்கியமான வேலைகளை விட்டுவிட்டு வீடியோ கேம்ஸ் ஆடுவதில் நேரத்தை செலவு செய்கின்றீர்கள், வீடியோ கேம்ஸிற்கு அடிமையாக இருக்கின்றீர்கள் என்றால் உண்மையில் வீடியோ கேம்ஸ் நேரத்தை வீணடிக்கின்றது என்று அர்த்தம்.

இதுவே எனக்கு முக்கியமான வேலைகள் எதுவுமில்லை ஒய்வாக இருக்கின்றேன் என்கின்ற போது வீடியோ கேம்ஸ் விளையாடினால் அந்த நேரத்திற்கு வீடியோ கேம்ஸ் உகந்ததாக இருக்கும். கிட்டத்தட்ட இதுவும் திரைப்படம் போன்றதுதான்.

வீடியோ கேம்ஸ் என்பது தனி உலகம் என்றும் சொல்லலாம். புது புது விஷயங்களை அனுபவிக்கலாம். நல்ல கதைகளை கொண்ட கேம்ஸ் ஆடினால் புதிய கதைகளை தெரிந்துகொள்ளலாம். Simulator Games என்றால் நிஐத்தில் இருப்பதை போன்ற உணர்வை கேமிங்கில் பெற்றுக்கொள்ளலாம். ஏராளமான விஷயங்கள் உள்ளே இருக்கின்றன. புதிய சிந்தனைகளை மனதில் வீடியோ கேம்ஸ் உருவாக்கும்.

ஒரு திரைப்படத்தை எப்படி இரசிக்கிறீர்களோ அது போலத்தான் வீடியோ கேம்ஸ். என்னை கேட்டால் திரைப்படம் உங்களுக்கு பயனுள்ளது என்றால் கேமிங் அதை விட பயனுள்ளது. ஒருவர் கேம்ஸ்ஸிற்கு அடிமையாகாமல் வீடியோ கேம்ஸ்ஸை இரசனையோடு விளையாடினால் நேரத்தை வீணாக்குகின்றார் என்று சொல்லிவிட முடியாது.

நேரத்தை வீணடிக்கின்றது என்று சொல்பவர்கள் பல பேர் மொபைல், சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி சீரியல் என நிறைய வழிகளில் நேரத்தை வீணடிப்பார்கள். அதற்கு வீடியோ கேம்ஸ் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கேமிங் மூலமாக பணம் சம்பாதிக்க முடியாது

Money

இந்த விடயத்தை பொய் என்று சொல்வதை விட நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன். கேமிங் என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி மிகப்பெரிய வணிகம் நடக்கின்றது.

உலகில் அதிகமாக வசூல் செய்த திரைப்படத்தை விட வீடியோ கேம் அதிகமாகவே பணத்தை சம்பாதித்துள்ளது. இதிலிருந்து கேமிங் தொழிற்துறை எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

கேமிங் மூலமாக பல பேர் பல வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர். இணையம் என்று எடுத்துக்கொண்டால் Streamers, Content Creators நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்கள் சம்பாதிப்பார்கள். இதனை தவிர Game Sellers, Game Centers வைத்திருப்பவர்கள் என அவர்களும் சம்பாதிக்கின்றார்கள். 

தற்போது பெரிய அளவில் E-sports துறையும் வளர்ந்து வருகின்றது. Battle Royale Games-களை விளையாடுகிறவர்கள் E-sports போட்டிகளில் பங்குபற்றி போட்டியிட்டு பெரிய அளவில் பணத்தை பரிசாக பெற்றுக்கொள்கின்ற வாய்ப்புக்களும் உண்டு. 

நீங்கள் கேமிங்கை தொழிற்துறையாக தெரிவு செய்தால் கேம்ஸ்களை தயாரிக்கின்ற நிறுவனங்களில் நிறைய வேலைகள் உங்களுக்காக இருக்கின்றன. Game designer, Game developer, Game animator, Game engineer, Game tester போன்ற நிறைய வேலைகள் இருக்கின்றன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கேமிங் துறையை தொழிற்துறையாக தெரிவு செய்து கொள்ள முடியும்.

கேமிங் என்பது பொழுதுபோக்கு என்பதை தாண்டி பணம் சம்பாதிப்பதற்கான வழிகளையும் பெற்றுத்தருகின்றது. அவற்றை சரியாக பயன்படுத்தினால் நிறையவே சம்பாதிக்கலாம்.

வீடியோ கேம்ஸ் வன்முறையை தூண்டுகின்றது

வீடியோ கேம்ஸ் வன்முறைய தூண்டுகின்றது என்ற கருத்தும் நிறைய காலமாகவே இருந்து வருகின்றது. ஒரு திரைப்படத்தில் வன்முறைக் காட்சியைப் பார்த்தால் நமக்கு அதே எண்ணம் வருமா? என்றால் பெரும்பாலும் இல்லை. காரணம் திரைப்படத்தை திரைப்படமாகப் பார்க்கின்றோமே தவிர அதனை நிஜ உலகில் அறிவார்ந்த மனிதர்கள் முயற்சிக்க மாட்டார்கள். அதே போன்றுதான் வீடியோ கேம்ஸ்.

கேமிங் என்றாலே சண்டை, தற்கொலை, வன்முறை என்பதாக பலருக்கும் நம்ப வைப்பதில் ஊடகங்கள் முக்கியமான இடத்தை பெறுகின்றன. உதாரணமாக Blue whale என்ற ஒரு Challenge எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அதனையும் வீடியோ கேம்ஸ்ஸையும் ஒப்பிட்டுச் சொல்கின்ற அளவுக்கு தொலைக்காட்சிகள் முட்டாள்த்தனமாக செயற்படுகின்றன.

கேமிங் ஒருவனை தனிமைப்படுத்துகின்றது

கேமிங் ஒரு மனிதனை தனிமைப்படுத்திவிடுமா என்று கேட்டால் இல்லை. இந்த கருத்து உருவாகியதற்கான காரணம் வீடியோ கேம்ஸ் ஆடுபவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருந்து வீடியோ கேம்ஸ் ஆடுவதையே விரும்புவார்கள். இதனை வைத்துத்தான் தனிமைப்படுத்துகின்றது என்று சொல்கின்றார்கள்.

அப்படிப் பார்த்தால் திரைப்படங்களைக்கூட பல மனிதர்கள் தனிமையில் இருந்துதான் பார்க்கிறார்கள். அதற்காக திரைப்படங்கள் எல்லாமே மனிதர்களை தனிமைப்படுத்திவிடுகின்றது என்று சொல்லமுடியுமா?

சில பேருக்கு வாழ்க்கையில் புதிதாக நண்பர்கள் வீடியோ கேம்ஸ் மூலமாகவே கிடைத்திருப்பார்கள். பொதுவாகவே கேம்ஸ் ஆடி முடித்துவிட்டு மீண்டும் வந்து மற்றவர்களுடன் பழகுவார்கள். அப்படி இருக்கும்போது ஒருவரை கேமிங் தனிமைப்படுத்துகிறது என்று சொல்ல முடியாது.

இந்தக்கருத்தின்படி பார்த்தால் கணணியுடன் இருந்து தனியாக வேலை செய்கின்ற எல்லோரும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். கேமிங் ஒருவனை தனிமைப்படுத்துகின்றது என்று சொல்வது பொய்.

வீடியோகேம்ஸ் ஒருவரின் செயற்திறனை குறைக்கின்றது

Brain

வீடியோ கேம்ஸ் மனிதனின் செயற்திறனைக் குறைக்கின்றது என்று சொல்ல முடியாது. வீடியோ கேம்ஸை பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தும் போது அடிமைப்படுத்துகின்றதே தவிர மற்றப்படி வீடியோ கேம்ஸ் என்பது ஒருவரைக் கெடுப்பதற்கு போதைப்பொருளோ, மதுவோ கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

சொல்லப்போனால் திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் வீடியோ கேம்ஸ் யோசிக்க வைத்து சிந்தனைத் திறனை அதிகரிக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். சமூகத்தில் ஒருவரின் செயற்திறனையும், கற்பனைத்திறனையும் அழிப்பதற்கான கருவிகள் நிறைய இருக்கின்றன.

கேமிங் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் அதிகமாக பரவுவதற்கான காரணம் கேமிங் என்றால் என்ன? என்பதை சரியாக புரிந்துகொள்ளாததே.

வீடியோ கேம்ஸ் ஆடுவதென்றால் முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு மகிழ்ச்சிக்காக, பொழுதுபோக்கிற்காக, அனுபவத்திற்காக வீடியோ கேம்ஸ் ஆடலாம். அதனை விட்டுவிட்டு கேம்ஸ்ஸிற்கு அடிமையாகி நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தால்தான் கேமிங் பற்றி சொல்லப்படுகின்ற பொய்கள் உண்மையாகின்றன.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading