Last updated on September 15th, 2023 at 02:26 pm

நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நமக்கு இந்த வாழ்க்கை பிடிக்கின்றதோ இல்லையோ வாழ்க்கை எனும் பயணப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நம்மைப் போன்ற வாழ்க்கைதான் எல்லோருக்கும் என்றில்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை.

சில பேருக்கு அவர்கள் வாழும் வாழ்க்கை பிடித்திருக்கலாம். சில பேருக்கு அவர்கள் வாழும் வாழ்க்கை பிடிக்காமல் போகலாம். சிலருக்கு நிம்மதியான வாழ்க்கை அமையலாம். சிலருக்கு நிம்மதியே இல்லாமல் ஏன் இந்த வாழ்க்கை என்றும் தோன்றலாம். அதே போல சில பேர் வாழ்க்கையில் ஏதோவொரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ எதற்காக வாழ்கின்றோம் என்று தெரியாமல் இலக்கற்ற பயணி போல் வாழ்க்கை போகின்ற போக்கில் சென்றுகொண்டிருப்பார்கள்.

எல்லோரும் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொள்வார்களா? என்றால் இல்லை. எல்லோருமே தன்னுடைய எண்ணம் போல் வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதாவது தான் விரும்புவது போன்று நிம்மதியான, மகிழ்ச்சியான, செல்வச் செழிப்புடன், வெற்றிகரமான வாழ்க்கையை வாழவேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆனால் அவ்வாறான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடாது. ஒரு சிலரால் மட்டுமே ஒரளவாவது அவர்கள் நினைப்பது போன்ற வாழ்க்கையை வாழ முடியும். எப்போதும் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் நாம் வாழ வேண்டும் என்று எண்ணுகின்ற வாழ்க்கை ஒருபோதும் தானாக அமையாது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும். நமக்குப் பிடித்தமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் நமது மனதிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த பொன்மொழிகளில் சிறந்தொன்றான “எண்ணம் போல் வாழ்க்கை” என்பது அதைத்தான் உணர்த்துகின்றது. அந்த பொன்மொழியை என்னால் இரண்டுவிதமான அர்த்தங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஒன்று நமது மனதில் எவ்விதமான எண்ணங்களை விதைக்கின்றோமோ அதன்படிதான் நமது வாழ்க்கையும் அமையும்.

இரண்டாவதாக புரிந்துகொள்ள முடிந்தது என்னவென்றால் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவ்வாறு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழவேண்டும். இரண்டிற்குமிடையே இருக்கின்ற வேறுபாட்டை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நினைக்கின்றேன்.

நிறைய நேரங்களில் நமது வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்வுகள் நமது மனதில் தோன்றும் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கும். பொதுவாக நாம் எதைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கின்றோமோ அதனுடன் தொடர்படையதாகவே நமது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கும். நமது மனம் எதை அதிகமாக சிந்தித்து நம்பிக்கொண்டிருக்கின்றதோ அதை நோக்கிய செயல்களைத்தான் வாழ்க்கையில் செய்துகொண்டிருப்போம். ஒருவேளை எதிர்மறையான சிந்தனைகளுடன் நம்பிக்கை இல்லாமல் மனம் இருக்குமானால் வாழ்க்கையில் எந்தச் செயலைச் செய்தாலும் வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை நமக்குள் இல்லாததால் பெரும்பாலான நேரங்களில் அவற்றை வெற்றிகரமாக முழுமையாக நம்மால் செய்து முடிக்க முடியாது. நமது மனதில் தோன்றும் எண்ணங்கள் வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்களில் பிரதிபலிக்கும்.

இரண்டுவிதமான மனிதர்கள் இருக்கின்றார்கள். முதலாவது வகையான மனிதர்கள், தனது வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அவற்றிலிருந்து எதிர்மறையான விடயங்களை எடுத்துக்கொண்டு எதிர்மறையான எண்ணத்துடன் அணுகுவார்கள். எதேச்சையாக நடக்கும் எதிர்மறையான நிகழ்வுகளைக் கூட தன்னுடைய வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய எண்ணங்களையும் எதிர்மறையாக மாற்றி வாழ்க்கையை வாழ்வார்கள். “மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போன்றுதான் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களிற்கு என்ன நடந்தாலும் தன்னுடைய வாழ்க்கையில் எல்லாமே எதிர்மறையாக நடப்பதாகத்தான் தோன்றும்.

இரண்டாவது வகையான மனிதர்கள் நேர்மறையான எண்ணங்களைக் கொண்ட மனிதர்கள். தன்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் அவற்றை நேர்மறையாகவே அணுகுவார்கள். வாழ்க்கையில் எதாவது எதிர்மறையான சம்பவங்கள் நடந்தாலும் கூட நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணி கடந்து சென்றுவிடுவார்கள். இவர்கள் நேர்மறையான எண்ணங்களை கொண்டிருப்பதால் செய்யும் செயல்களில் தன்நம்பிக்கை, விடாமுயற்சி இருக்கும். இதுவே அவர்கள் செய்யும் செயல்கள் வெற்றிகரமாக அமைய வழிவகை செய்யும்.

இவ் இரண்டு விதமான மனிதர்களில் முதலாவது வகையினர்தான் அதிகம். ஏன் சிலவேளைகளில் நீங்கள் கூட அவ்வாறான ஒருவராக இருக்கலாம். நீங்கள் வாழ்க்கையில் அதிகமாக எதிர்மறையாக எண்ணுபவராக இருந்தால் அதனை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எப்போதும் நல்ல எண்ணங்களை மனதில் விதைத்து நேர்மறையாக சிந்திப்பது நாம் நினைப்பதைப் போன்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவும்.

“எண்ணம் போல் வாழ்க்கை” என்பதை மற்றொரு வடிவிலும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது நாம் எவ்வாறு வாழவேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போன்றதொரு வாழ்க்கை என்று விளங்கிக்கொள்ள முடிகின்றது.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்ற, வாழப்போகும் வாழ்க்கை ஒரேயொரு முறைதான். நமது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் திரும்ப ஆரம்பத்திலிருந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது. ஆகவே நமது வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவ்வாறு வாழ்ந்துவிட வேண்டும். இன்று எமக்கான வாழ்வை மற்றவர்களின் எண்ணங்களுக்காக வாழ்ந்துவிட்டு காலம் கடந்த பின் நம் வாழ்க்கையை நாம் விரும்பியபடி நமது எண்ணங்களின் படி வாழவில்லையே என்று வருத்தப்படுவதில் எந்தப்பயனும் இருக்காது.

ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டிருக்கின்றோமோ அதே போல வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதாவது நமது எண்ணம் போல் வாழ்க்கை வாழ வேண்டும்.

நாம் விரும்புவது போன்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்குத்தான் ஆரம்பத்தில் கூறிய நேர்மறையான எண்ணங்களை நமது மனதில் கொண்டிருப்பது அவசியமாக இருக்கின்றது.

நமது வாழ்வில் இன்றைய நாள் திரும்பக் கிடைக்காது என்பதை மனதில் வைத்துக்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொண்டு எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து நேர்மையான எண்ணங்களை மனதில் விதைத்து நமக்கு விருப்பமான நாம் எண்ணுகின்ற வாழ்க்கையை வாழ்வோம்.

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading