கவனத்தை சிதறடிக்கும் டிஜிற்றல் உலகம்

Last updated on October 13th, 2023 at 10:36 pm

கவனச்சிதறல் என்பது எல்லா மனிதர்களிடமும் இருக்கின்ற பொதுவான இயல்புதான். யாராலும் கவனச்சிதறல் ஏற்படாமல் தொடர்ச்சியாக நூறு சதவீதம் வேலையை கவனத்துடன் செய்வது முடியாத காரியம்.

கவனச்சிதறல் என்பது ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டைச் செய்யும் போது இடைநடுவில் நாம் செய்கின்ற வேலையில் கவனம் இல்லாமல் வேறு செயற்பாடுகளின் பக்கம் நமது கவனம் செல்வதாகும். அதாவது நமது கவனம் குறிப்பிட்ட வேலையின் மேல் இல்லாமல் சிதறலடைகின்றது.

இன்றைய உலகில் கவனச்சிதறல் என்பது ஒரு வியாதியாக மாறிவிட்டது என்று சொன்னாலும் தவறில்லை. இன்றைய நாட்களில் கவனச்சிதறல் இயற்கையாக அல்லாமல் செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்றது. அதற்கான அடிப்படைக் காரணமாக அமைவது டிஜிற்றல் சாதனங்களாகும்.

வேலை ஒன்றைச் செய்ய ஆரம்பித்தால் வேலை செய்கின்ற நேரத்தை விட கவனச்சிதறல் ஏற்பட்டு தேவையில்லாமல் மொபைல் பயன்படுத்துவதில் அதிகமான நேரத்தை வீணடிப்பதை பல மனிதர்களிடமும் பொதுவாக அவதானிக்கக்கூடிய பண்பாகவுள்ளது.

நீங்கள் ஒரு செயற்பாட்டைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். அந்த நேரத்தில் வேலைக்காக மொபைல் மற்றும் இணையம் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. அச்சந்தர்ப்பத்தில் சமூகவலைத்தளங்களிலிருந்து அறிவிப்புக்கள் (Social Media Notifications) வருகின்றன. அறிவிப்புகளைப் பார்த்து உள்ளே சென்று அங்கு நேரத்தை தொடர்ச்சியாக செலவு செய்கிறீர்கள்.

மேலே சொன்ன சம்பவம் உங்களுக்கு நடந்துகொண்டிருக்கலாம். நான் மேலே சொன்ன சம்பவம் டிஜிற்றல் சாதனங்களால் ஏற்படும் கவனச்சிதறலுக்கான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் போதைக்கு அடிமையாக இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்வீர்கள். ஆனால் உண்மையில் நிறையப் பேர் போதைக்கு அடிமையாக இருக்கின்றார்கள். மொபைலிலிருந்து வருகின்ற அறிவிப்புகள், சமூக வலைத்தளங்களிலிருந்து வருகின்ற விருப்பங்கள், கருத்துக்கள், பார்வைகள் (Likes, Comments, Views) போன்றவற்றிற்கு அடிமையாக இருப்பது கூட போதை போன்றதுதான். இவையெல்லாம் உங்களை அடிமையாக வைத்திருக்கின்றது.

டிஜிற்றல் உலகினால் கவனச்சிதறல் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. படித்துக்கொண்டிருக்கும் போது அல்லது வேலை செய்துகொண்டிருக்கும் போது மொபைலில் அறிவிப்புகள் வந்தால் அது என்ன அறிவிப்பு என்று பார்க்கும் வரை நிறையப் பேரால் நிம்மதியாகவே இருக்க முடியாது. செய்கின்ற வேலையை கவனத்துடன் செய்ய முடியாது. என்ன அறிவிப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எண்ணம் இருந்துகொண்டே இருக்கும்.

பல மனிதர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. மொபைலில் யாரும் அழைத்திருக்க மாட்டார்கள், மொபைலில் எந்த அறிவிப்புக்களும் வந்திருக்காது. ஆனாலும் அடிக்கடி மொபைலை எடுத்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். இன்று பல பேருடைய உண்மையான நிலை இதுதான். அதே போன்று சமூகவலைத்தளங்களில் உள்ள Likes, Status, Comments, Views போன்ற விடயங்கள் பல பேருக்கு போதையாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

டிஜிற்றல் சாதனங்கள் நமது வாழ்க்கையில் ஒர் அங்கமாக மாறிவிட்டன. அதன் விளைவாக டிஜிற்றல் சாதனங்களினால் ஏற்படும் கவனச்சிதறல் என்பதும் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. டிஜிற்றல் சாதனங்களை எங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் அவை எங்களுடைய வாழ்க்கையையே கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும்.

நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது அறிவிப்புகள் வந்தால் அது என்ன? என்பதை தெரிந்துகொள்ளாமல் கவனத்துடன் வேலையையோ தொடர முடியாது என்ற நிலையில் நீங்கள் இருந்தால் அல்லது Likes, Status, Comments, Views போன்ற விடயங்களுக்கு அடிமையாக இருக்கிறீர்கள் என்றால் இவை உங்களுடைய வாழ்க்கையில் ஏதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்களிடம் கவனச்சிதறல் இருந்தால் அதிலும் குறிப்பாக மொபைல் போன்ற டிஜிற்றல் சாதனங்களால் ஏற்படுகின்ற கவனச்சிதறல்கள் அதிகமாக இருந்தால் உங்களுடைய குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளை அடைவதற்கு கவனச்சிதறல் எனும் பிரச்சினை தடையாக இருக்கும்.

எதற்காக மொபைல் பயன்படுத்துகிறோம் என்ற காரணமே இல்லாமல் மொபைல் பயன்படுத்திக் கொண்டிருப்பீர்கள். உங்களுடைய பெறுமதியான நேரத்தை மொபைல் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதிலேயே வீணடித்துக்கொண்டிருப்பீர்கள். பயனுள்ள வகையில் எந்த வேலையையும் செய்ய மாட்டீர்கள். ஏதாவது வேலையைச் செய்யப்போனாலும் மொபைலின் தாக்கம் இடையிடையே மொபைலை எடுத்து பயன்படுத்தத் தூண்டும்.

மொபைல், இணையம், சமூகவலைத்தளங்கள் எல்லாமே நாம் சரியாகப் பயன்படுத்தினால் நம்மை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும். அதை விட்டு அதற்கு அடிமையாகினால் நமது வாழ்க்கையிலும், நமது இலக்குகளிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மொபைலில் மூழ்கியிருக்க வேண்டியதுதான்.

மொபைலினால் உங்களுக்கு அடிக்கடி கவனச்சிதறல் ஏற்படுமாயின் அதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நிஜ வாழ்க்கையில் சிறந்ததொரு வாழ்க்கையை வாழ முடியும்.

டிஜிற்றல் சாதனங்களால் ஏற்படும் கவனச்சிதறலைக் கட்டுப்படுத்த நிறைய வழிமுறைகளைப் பின்பற்றலாம். நமது வாழ்க்கையை டிஜிட்டல் சாதனங்கள் ஆக்கிரமித்துவிடக்கூடாது என்றால் முதலில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

வாழ்க்கையை மேம்படுத்த நினைக்கிற ஒவ்வொருவரும் முதலில் மொபைலை தூக்கி தூர எறிந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன். உங்களுடைய நேரத்தை வீணடிக்கின்ற செயலிகளை அழிக்கலாம். அறிவிப்புக்கள் எல்லாவற்றையும் அணைத்து வைக்கலாம்.

எதற்காக மொபைல் பயன்படுத்துகிறோம் என்ற நோக்கம் இல்லாமல் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வேலை செய்யப்போகிறீர்கள் அல்லது படிக்கப்போகிறீர்கள் என்றால் மொபைலை அருகில் வைத்திருக்கக்கூடாது. மொபைல் அருகில் இருக்கும் வரை உங்களால் வேலைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாது. ஒரு செயற்பாட்டைச் செய்யும் போது முழுமையான கவனத்துடன் வேண்டும்.

நிஜ வாழ்க்கையில் இலக்குகளை உருவாக்கி அதற்காக உழைக்க வேண்டும். எந்தவொரு இலக்கும் இல்லாவிட்டால்தான் நிறைய நேரம் மொபைலிற்கு அடிமையாகின்றோம்.

நாம் வாழ்வது நிஜமான உலகில் அப்படியிருக்கும் போது எதற்காக தேவையில்லாமல் டிஜிட்டல் உலகத்தில் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading