கலாசாரம் – Culture

Last updated on February 4th, 2024 at 02:10 pm

கலாசாரம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கண்ணோட்டம் இருக்கின்றது. சிலர் கலாசாரம் சிறந்த அறிவையும் விழுமியங்களையும் கற்றுத்தருகிறது என்பார்கள். சிலர் கலாசாரம் என்ற பெயரில் பிற்போக்குத்தனம் விதைக்கப்படுகின்றது என்பார்கள். கருத்துக்களுக்கு அப்பால் ஒவ்வொரு மனிதனும் ஏதேனுமொரு கலாசாரத்துடன் இணைந்துதான் இருக்கின்றான். உலகம் பல்வேறுபட்ட கலாசாரங்களைக் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது.

கலாசாரம் என்பது தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதால் ஒரு மனிதன் விரும்பியோ விரும்பாமலோ அவனுடைய வாழ்வியலில் கலாசாரம் தாக்கம் செலுத்தும். கலாசாரம் என்பதையே மறந்துவிட்டு நவீனத்துவம் என்று அடியெடுத்து வைப்பவர்கள்கூட பேசுகின்ற மொழி, பின்பற்றுகின்ற சமயம், கொண்டாடுகின்ற பண்டிகைகள் போன்ற சில கூறுகளினூடாக கலாசாரம் என்ற ஒன்றிலிருந்து அப்பால் முழுமையாக விலகிச்செல்ல முடியாதவர்களாகவே இருக்க முடியும்.

கலாசாரம் என்பது மக்கள் குழுவொன்றின் வாழ்வியல், பாரம்பரியமாக கடத்தப்படுகின்ற அறிவு, அம்சங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் கலாசாரம் ஆகும். பாரம்பரியமாக கடத்தப்படும் விடயங்கள் எனும் போது மொழி, சமயம், இலக்கியம், கலை, உணவு, உணர்வு, அறிவு, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்கள் உள்ளடங்குகின்றன.

உலகத்தின் பகுதிகளைக் கொண்டு கிழக்கத்தைய கலாசாரம், மேற்கத்தைய கலாசாரம், ஆபிரிக்க கலாசாரம், மத்திய கிழக்கு கலாசாரம் என்று பல வகைகளாக வகைப்படுத்திக்கொள்ளலாம். அதே போன்று ஒவ்வொரு நாட்டினது கலாசாரங்களிற்கிடையிலும் மாறுபாடு உள்ளது. ஒரு நாட்டிற்குள்ளே வாழும் ஒவ்வொரு இனத்தினதும் கலாசாரங்களும் வித்தியாசப்படுகின்றன. அப்படிப் பார்க்கும் போது உலகம் கலாசாரப் பல்வகைமை வாய்ந்தது என்று கூறமுடியும்.

முன்னைய காலங்களில் உலகமயமாதல் இல்லாததால் ஒவ்வொரு மக்கள் குழுக்களும் தமது கலாசாரத்தை வழிவழியாகப் பின்பற்றி வந்தமையால் அவை பாதுகாக்கப்பட்டன. ஆனால் உலகம் நவீனமாக மாறி உலகமயமாதலின் விளைவாக நிறைய இனத்தவர்களின் கலாசாரத்தின் அம்சங்கள் அழிவடைகின்றன. உதாரணமாகச் சொன்னால் மேற்கத்தைய கலாசாரம் உலகின் நிறைய நாடுகளில் பரவியிருக்கின்றன. அதன் விளைவுதான் அவர்களுடைய மொழி, சமயம், பண்டிகைகள், உணவு, உடை போன்றவை நமது நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.

அவற்றை தவறு என்று யாரும் சொல்லமுடியாது. நவீனத்துவமானதாக, மேம்பட்டதாக, கவர்ச்சிகரமானதாக இருக்கும் போது எல்லோரும் அதை நோக்கிச் செல்வார்கள். அதேநேரம் சிலவேளைகளில் தமது கலாசாரத்தின் அம்சங்கள்தான் சிறந்தது என்றும் உங்களுடையது தவறு என்றும் ஒரு மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்குவதன் மூலமாக பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக கலாசாரத்தின் ஏதேனுமொரு அம்சம் திணிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட இனத்தவர்களின் கலாசாரத்தின் அம்சங்கள் பாதுகாக்கப்படாமல் அழிவடைகின்றன என்றால் அல்லது நவீனத்துவம் என்று வேறொரு கலாசாரத்தை மக்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் அதனால் எதிர்மறையான விளைவுகளும் ஏற்படலாம்.

முதலில் பாதிக்கப்படப்போவது மொழியாக இருக்கும். உதாரணமாக தமிழர்களின் வாழ்வியலில் இன்னொரு மக்களின் மொழி, சமயம், உணவு, பழக்கவழக்கங்கள் போன்றவை தமிழர்களிடத்தில் பரவும்போது அவர்களுடைய மொழி தமிழர்களின் வாழ்வியலின் எல்லா அம்சங்களிலும் அதிகமாக பிரயோகிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மொழி அழிவடையலாம். மொழி அழிவடையும் போது பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களான இலக்கியம், கலை, படைப்புகள் எல்லாம் மறைந்து போகலாம்.

இன்னுமோர் உதாரணமாக உணவு என்று எடுத்துக்கொண்டால் உணவு முறை அழிவடைந்து போகலாம். அவை சிலவேளைகளில் பாதுகாக்கப்பட வேண்டிய உணவுகளாக, உலகின் சிறந்த உணவுகளாக, மிகவும் ஆரோக்கியமான உணவுகளாகக்கூட இருக்கலாம். ஆனால் நவீனத்துவம் என்று கொண்டுவரப்பட்ட உணவினால் பாரம்பரியமான சிறந்த உணவுகள் காணாமல் போகலாம்.

இந்தமாதிரி சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக்கொண்டே போகலாம். கலாசாரம் அழிவடைகின்றது என்றால் மிகச்சிறந்த பாதுகாக்கப்பட வேண்டிய விடயங்களும் அழிவடைகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பாரம்பரியமாக கொண்டுவரப்படும் மிகச்சிறந்த விடயங்களை பாதுகாக்க வேண்டுமென்றால் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒர் இனத்தினுடைய கலாசாரத்தின் அம்சங்கள் பாதுகாக்கப்படும் போது அவனுக்கான அடையாளம் உருவாகின்றது. இது இன்னோர் இனத்திற்கோ நாட்டிற்கோ அடிபணியாமல் தன்நம்பிக்கையுடன் மேம்பட்ட சமூகமாக நிலைத்திருக்க உதவுகின்றது. ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் இன்னொரு இனத்தவர்களைப் பார்த்து நான்தான் உன்னை விட சிறந்தவன், அறிவார்ந்தவன், மேலானவன் என்ற எண்ணத்தை விதைத்து அடிமைப்படுத்த நினைத்தால் இன்னோர் இனத்திற்கு அவர்களுடைய தலைமுறை தலைமுறையாக வந்த அறிவார்ந்த கலாசாரத்தின் அம்சங்களே தாம் முட்டாள்கள் இல்லை என்ற உண்மையை உணர்த்தி யாருக்குக் கீழும் இல்லாமல் சிறந்த வாழ்வை அமைத்துக்கொள்ள உதவி செய்யும்.

அதே போன்று ஒரு நாட்டிற்கான அங்கீகாரத்தை வழங்குவதில் கலாசாரத்தின் பங்கு இருக்கின்றது. நான் இலக்கியம், உணவு, பழமையான மொழி, தற்காப்புக்கலை, கட்டடக்கலை, வானியல் என்று கூறினால் ஒவ்வொன்றிற்கும் அடையாளமாக பண்டையகால நாடுகள் ஒவ்வொன்றைக் கூறமுடியும். அந்த அடையாளம் இன்றைக்கு உருவானதாக இல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும். அது அவர்களுடைய கலாசாரத்தின் அடையாளமாகவே இப்போது மாறியிருக்கும். அத்துடன் அவர்களுடைய கலாசார முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் சுற்றுலா போன்ற வழிகளினூடாக பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் காரணிகளாகவும் இருக்கும்.

எல்லாவற்றையும் தாண்டி பல நூற்றாண்டுகால அறிவு கலாசாரத்தினுள்ளே அடங்கியிருக்கின்றது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் அனுபவங்களும் அவர்களுடைய தலைமுறையினரின் அனுபவங்களும் சேர்ந்து கலாசாரமாக இன்றுவரை கடத்தப்பட்டுக்கொண்டிருக்கும். அப்படியானால் கலாசாரத்தின் அம்சங்களான மொழி, இலக்கியம், கலை, உணவு, பழக்கவழக்கங்கள் போன்ற விடயங்களுக்குள் எவ்வளவு அறிவும் அனுபவங்களும் ஒளிந்திருக்கும். உதாரணமாக இன்றைக்கும் நீங்கள் பழமையான கட்டுமானங்களைப் பார்த்தால் எவ்வளவு நுணுக்கங்கள், தொழினுட்பங்கள், அழகியல்கள் அடங்கியிருப்பதைப் பார்க்க முடியும். கலாசாரம் என்பதை ஒரு பக்கம் பழமையானது என்று சொன்னாலும் இன்னொரு பக்கம் கலாசாரம் என்பது ஒர் அறிவுப்பெட்டகம் என்றும் சொல்லலாம்.

அப்படியானால் கலாசாரம் மிகச்சிறந்த விடயங்களை மட்டுமா உள்ளடக்கியுள்ளது என்றால் அப்படியும் சொல்லிவிட முடியாது. கலாசாரத்தில் சிறந்த அம்சங்களோடு பிற்போக்குத்தனமான தவறான அம்சங்களும் இருக்கின்றன. கலாசாரத்தை பாதுகாக்கின்றேன் என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களையும், மூடநம்பிக்கைகளையும், தவறான விடயங்களையும் சமூகத்தின் மத்தியில் விதைக்கின்றவர்களும் பலர் இருக்கின்றார்கள்.

ஒருசில விடயங்கள் அந்தந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களால் அன்றையகால அறிவுக்கும், புரிதலுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ற மாதிரி கட்டமைத்திருப்பார்கள். ஆனால் அவை இன்றைய காலகட்டத்திற்கு பொருந்திப்போகாத விடயங்களாகவும் இருக்கலாம். கலாசாரத்தின் சிறந்த அம்சங்களோடு அவ்வாறான தவறான அம்சங்களும் தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கலாம். இன்று வாழ்கின்ற பகுத்தறிவுடைய மனிதன் தவறான விடயங்களை கைவிட்டுவிட்டு சிறந்த அம்சங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல்வேறுபட்ட சிறப்புக்களைக் கொண்ட கலாசாரத்தின் சிறந்த அம்சங்களை பாதுகாக்க வேண்டியது எல்லோருடையதும் கடமையாகும். முக்கியமாக மொழி, கலைப்படைப்புகள், இலக்கியம் போன்ற ஆக்கபூர்வமான அம்சங்களை பாதுகாக்க வேண்டியது கட்டாயம். தனி மனிதனைத் தாண்டி அரசாங்கங்கள் பாகுபாடு இல்லாமல் எல்லா இனத்தவர்களினதும் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

கலாசாரம் நமது முன்னோர்களிடமிருந்து நம்மை வந்தடைந்திருக்கின்றது. அதிலுள்ள பிற்போக்குத்தனமான தவறான விடயங்களை தவிர்த்துவிட்டு சிறந்த விடயங்களை எடுத்துக்கொண்டு நமது வாழ்வை மேம்படுத்தலாம். அதே போலவே கலாசாரத்தின் சிறந்த அம்சங்களை நமது எதிர்கால தலைமுறையினக்கும் சொல்லிக்கொடுத்து சிறந்ததொரு சமூகத்தை உருவாக்க வேண்டியது அவசியம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading