கிறிஸ்துமஸ் பற்றிய தகவல்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகளவில் எல்லோராலும் அறியப்படக்கூடிய ஒர் பண்டிகை. வருட இறுதி என்றால் புதுவருடம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகிய இரண்டுமே மனதில் தோன்றும் நிகழ்வுகளாக இருக்கும். அதிலேயும் டிசெம்பர் மாதம் ஆரம்பித்து விட்டாலே கிறிஸ்துமஸ்துக்கான அலங்காரங்களும் வேலைப்பாடுகளுமே கிறிஸ்துமஸ் பண்டிகையை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.

நத்தார் பண்டிகை என்று அழைக்கப்படுகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகின்றேன்.

01. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காலம் நிறையப்பேருக்கு விடுமுறை நிகழ்வாக இருக்கும். கிறிஸ்துமஸ் பல்வேறுபட்ட மக்களுக்கு கலாசார நிகழ்வாக, சமய நிகழ்வாக, இறை நம்பிக்கை சார்ந்த நிகழ்வாக இருக்கின்றது. அதனைத்தாண்டி பலருக்கு வணிகம் சார்ந்த நிகழ்வாகவும் கிறிஸதுமஸ் பண்டிகை உள்ளது.

02. கிறிஸ்துமஸ் இயேசுவின் பிறந்த தினத்தைக் குறிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. ஆனால் இயேசு பிறந்த திகதி சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் டிசெம்பர் 25 ஆம் திகதி இயேசுவின் பிறந்த தினமாக பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது.

03. தற்போது பயன்படுத்தப்படும் “Christmas” என்ற வார்த்தை “Cristes maesse” என்ற ஆரம்பகால ஆங்கிலத்திலிருந்து தோன்றியதாகும். Cristes maesse என்பது இயேசுவை கொண்டாடுவதற்கான நிகழ்வென குறிப்பிடப்படுகின்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை X mas என்றும் அழைக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். X mas என்ற வார்த்தையிலுள்ள “X” என்பது கிறீக் எழுத்திலிருந்து வந்தது. Mas என்பது ஆரம்பகால ஆங்கிலத்திலிருந்து வந்தது. இரண்டும் இணைந்து X mas என்று அழைக்கப்படுகின்றது.

04. கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் Santa Claus எனப்படும் நத்தார் தாத்தா எல்லா மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் மனிதராக உள்ளார். சிவப்பு நிறத்தில் உடை அணித்து, கண்ணாடி அணிந்து வெள்ளைத் தாடியில் சிறுவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்குபவர் நத்தார்த் தாத்தா.

Santa Claus என்ற நத்தார் தாத்தா புனித நிக்கலஸ் (Saint Nicholas) என்ற பாதிரியாரைக் குறிக்கின்றது. நிக்கோலஸ் அவர்கள் சிறுவர்களுக்கு நிறையவே பரிசுப்பொருட்களை வழங்குபவராக இருந்திருக்கின்றார். அவரிடமிருந்துதான் நத்தார் தாத்தா எனும் கதாப்பாத்திரம் உருவாகியுள்ளது.

05. கிறிஸ்துமஸ் பண்டிகை அலங்காரத்தில் கிறிஸ்துமஸ் மரம் பிரபலமானதாகவும் முக்கிய பங்கினையும் வகிக்கின்றது. கிறிஸ்துமஸ் மரமாக எவர்கிறீன் (Evergreen) பயன்படுத்தப்படுகின்றது. செயற்கையாக உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் நிறைய இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கிறிஸ்துமஸ் மரங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மரத்தின் உச்சயில் நட்சத்திரம் பதிக்கப்பட்டு மரத்திலே நிறையப்பொருட்கள் தொங்கவிடப்பட்டிருக்கும்.

கிறிஸ்மஸ் மரங்களைக்கொண்டு அலங்கரிப்பது பண்டைய எகிப்து, ரோமன் காலகட்டத்தில் தோன்றியது. குளிர்காலம் முடிந்த பின்னர் சூரியன் வரும்போது மீண்டும் துளிர்க்கப்போகின்ற மரங்களை ஞாபகப்படுத்தும் விதமாக எவர்கிறீன் மரங்களை வைத்து கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

06. ஜிங்கில் பெல்ஸ் (Jingle bells) என்ற பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலை நீங்கல் அறிந்திருப்பீர்கள். ஆனால் இந்தப் பாடல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக உருவாக்கப்பட்ட பாடல் கிடையாது. Thanksgiving தினத்திற்காக உருவாக்கப்பட்டு பிற்பட்ட காலத்திலேயே கிறித்துமஸ் பண்டிகைக்கான பாடலாக மாற்றமடைந்தது.

ஜிங்கில் பெல்ஸ் பாடல் 1850 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பியர்பொன்ட் (James Pierpont) என்பவரால் எழுதப்பட்டது. ஜிங்கில் பெல்ஸ் பாடல் 1857 இல் “The One Horse Open Sleigh” என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

07. கிறிஸ்துமஸ் பண்டிகை சார்ந்து நிறைய சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் பூமியை விட்டு வெளியே விண்வெளியில் இசைக்கப்பட்ட முதலாவது பாடல் என்ற சாதனை ஜிங்கில் பெல்ஸ் பாடல் மூலமாகவே நிகழ்த்தப்பட்டது.

1965 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதி நாசாவின் Gemini 6A என்ற விண்வெளி விமானத்தினூடே ஜிங்கில் பெல்ஸ் பாடல் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கிண்ணஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

08. கிறிஸ்துமஸ் பண்டிகை அமெரிக்கா, ஜரோப்பா போன்ற கிறஸ்தவ சமயத்தை பின்பற்றும் நாடுகளில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஆனால் வரலாற்றில் தொடர்ச்சியாக இவ்வாறிருந்ததில்லை. பல அரசுகளால் பல சந்தர்ப்பங்களில் கிறிஸ்துமஸ் தடைசெய்யப்பட்டிருக்கின்றது.

1644 இல் புரட்டஸ்ஸாந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாரளுமன்றம் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டச் செயற்பாடுகளுக்கு தடைவிதித்திருந்து. 1660 இல் அந்தத் தடை நீக்கப்பட்டது. 1659 இலிருந்து 1681 வரை அமெரிக்காவில் பொஸ்டனில் (Boston) கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தடையிருந்தது. இதே போன்று பல நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தடைகள் இருந்திருக்கின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகை இது போன்ற நிறையவே சுவாரஷ்யமான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. நீங்களும் கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளலாம். உங்களுடைய கருத்துக்களையும் கூறுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading