வண்ணத்துப்பூச்சி விளைவு

Last updated on January 14th, 2024 at 05:17 pm

நாம் வாழ்க்கையில் எதிர்பாராமல் செய்கின்ற சிறிய தவறுகள் நீண்ட நாட்களின் பின்னர் எதிர்பாராத பெரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம். இதனை உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

அவ்வாறு சிறிய சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால் அதனை வண்ணத்துப்பூச்சி விளைவு அல்லது பட்டாம்பூச்சி விளைவு (Butterfly Effect) என்று அழைக்க முடியும்.

வண்ணத்துப்பூச்சி விளைவைப் பற்றி கூறுகின்ற நிறையத் திரைப்படங்கள் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்திருக்கின்றன.

தமிழில் ஐில் ஐங் ஐக் திரைப்படத்தில் கதாநாயகன் ஒரு வசனம் கூறியிருப்பார். “ஒருவருடைய தலையெழுத்தை மாற்றுகின்ற பெரிய சம்பவங்கள் கூட ஏதோவொரு இடத்தில் சம்பந்தமே இல்லாமல் நடக்கின்ற சின்ன விஷயத்தினுடைய விளைவுதான்” என்பதுதான் அந்த வசனம். இந்த வசனம் Butterfly Effect உடன் நூறு சதவீதம் பொருந்தக்கூடியது. அதேபோல தமிழில் தசாவதாரம் திரைப்படத்திலும் பட்டாம்பூச்சி காட்டியிருப்பார்கள்.

பட்டாம்பூச்சி விளைவு என்றால் என்ன?

வண்னத்துப்பூச்சி விளைவு (Butterfly Effect) என்பது ஒரு கோட்பாடு. வண்ணத்துப்பூச்சி விளைவு கோட்பாட்டினுடைய தந்தை எட்வேர்ட் லோரன்ஸ் ( Edward Lorenz ) ஆவார்.

எட்வேர்ட் லோரன்ஸ் பட்டாம்பூச்சி விளைவு பற்றி இப்படி கூறுகின்றார். “பிரேசில் நாட்டில் வண்ணத்துப்பூச்சி ஒன்றின் சிறகடிப்பினால் டெக்ஸாசில் புயல் உருவாகலாம்” என்று குறிப்பிடுகின்றார்.

எட்வேர்ட் லோரன்ஸ் கூறியதன் அர்த்தம் என்ன? ஏதோவொரு நேரத்தில் ஏதோவொரு இடத்தில் ஏற்படுகின்ற சிறிய சம்பவம் வேறொரு நேரத்தில் வேறொரு இடத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதே அதனுடைய அர்த்தமாகும்.

தசாவதாரம் திரைப்படத்தை வைத்து வண்ணத்துப்பூச்சி விளைவை நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

தசாவதாரம் திரைப்படத்தின் படி, பல நூற்றாண்டுகளிற்கு முன் கடலில் போடப்பட்ட சிலையினுடைய விளைவினால் பலநூறு வருடங்களின் பின்னர் சுனாமி உருவாகுவதாக காட்டியிருப்பார்கள். இதனை ஒரு வண்ணத்துபூச்சி விளைவாக (Butterfly Effect) எடுத்துக்கொள்ளலாம்.

வண்ணத்துப்பூச்சி விளைவு எவ்வாறு உருவாகியது?

1960 இல் எட்வேர்ட் லோரன்ஸ் காலநிலையை ஆய்வு செய்வதற்காக தரவுகளை பகுப்பாய்வு செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் தனக்கு கிடைத்த தரவுகளை புள்ளிக்கு( . ) பின்னர் 6 இலக்க எண்ணாக கணணியில் பதிவு செய்கின்றார். உதாரணமாக 0.651403 என வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு வகையான முடிவுகள் கிடைக்கின்றன.

பின்னர் முடிவுகள் சரியா என பார்ப்பதற்காக மறுபடியும் தரவுகளை கணணியில் பதிவு செய்கின்றார். ஆனால் இந்த தடவை Point இற்கு பின்னர் 4 இலக்க எண்ணாக பதிவிடுகின்றார். உதாரணமாக 0.6514 என்று வைத்துக்கொள்வோம். இப்போது கிடைத்த முடிவுகளிற்கும் முதலில் கிடைத்த முடிவுகளிற்கும் பெரியளவில் வித்தியாசம் இருப்பதை அவதானிக்கின்றார்.

அவர் தனது கணணியில் ஏதோ பிரச்சினை என நினைத்தார். மீண்டும் தரவுகளை பதிவு செய்து முடிவுகளை சரி பார்த்தார். பின்னர்தான் ஒரு விடயத்தை புரிந்து கொள்கின்றார். 6 இலக்கமாக பதிவிட்ட போது ஒரு வகையான முடிவும் 4 இலக்கமாக பதிவிட்ட போது வேறுபட்ட முடிவும் கிடைத்தது.

Point இற்கு பின்னர் 4 இலக்கமாக பதிவு செய்ததிற்கும் 6 இலக்கமாக பதிவு செய்ததிற்கும் சிறிதளவுதான் வித்தியாசம் இருந்தாலும் வருகின்ற முடிவுகளில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது.

இந்த சம்பவத்தின் பின்னர்தான் எட்வேர்ட் லோரன்ஸ் அவர்களால் கேயஸ் தியரி என்பது முன்வைக்கப்பட்டது.

அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத விடயங்களை கணிப்பதற்காக பயன்படுத்தப்படுவது கேயாஸ் தியரி ஆகும். உதாரணமாக காலநிலை, வானிலை, பங்குசந்தை போன்ற கணிக்க முடியாத நிகழ்வுகளை கணிப்பதற்காக கேயாஸ் தியரி  பயன்படுத்தப்படுகின்றது.

கேயஸ் தியரியின் பின்னர் வண்ணத்துப்பூச்சி விளைவு கோட்பாடு உருவாகின்றது. சிறிய சம்பவங்கள் பெரிய விளைவுகளை உருவாக்காலாம் என்பதே வண்ணத்துப்பூச்சி விளைவு என்று ஒரே வரியில் சொல்லலாம்.

வண்ணத்துப்பூச்சி விளைவினால் ஏற்படும் விளைவுகள்?

வண்ணத்துப்பூச்சி விளைவு (Butterfly Effect) கேட்பதற்கு சிறிய விடயம் போல தெரிந்தாலும் உலகின் வரலாற்றையே மாற்றியமைத்த பெரும் நிகழ்களில் வண்ணத்துப்பூச்சி விளைவு தாக்கம் செலுத்தியிருக்கலாம்.

புரட்சிகரமான கண்டுபிடிப்புக்கள், போர்கள், நிகழ்வுகள் போன்ற எல்லா வரலாற்று சம்பவங்களிலும் வண்ணத்துப்பூச்சி விளைவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வண்ணத்துப்பூச்சி விளைவானது எல்லோருடைய வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றது என்பது சுவாரஸ்யமான உண்மை. வண்ணத்துப்பூச்சி விளைவினால் ஏற்படுகின்ற தாக்கங்கள் சதாகமானவையாகவும் இருக்கலாம். பாதமானமானவையாகவும் இருக்கலாம்.

எதிர்பாராமல் ஏற்படுகின்ற விளைவுகளிற்கு நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் பலரும் வாழ்க்கையில் எடுக்கின்ற முடிவுகளால் எதிர்காலத்தில் பாரிய மோசமான விளைவுகள் ஏற்படும் என தெரிந்திருந்தும் பல காரணங்களிற்காக அசட்டுத்தனமான முடிவுகளை எடுக்கின்றோம் என்பது நிறைய நேரங்களில் உண்மையாகிவிடுகிறது.

அவற்றை தவிர்த்துக்கொள்வது நல்லது. நம்மால் முடிந்தவரை எதிர்காலத்தை கருத்திற்கொண்டு முடிவுகளை எடுப்பது சிறந்ததாக இருக்கும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading